தமிழ் ஓசை
தமிழ் ஓசை

“காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நட்டஈடு கண்துடைப்பு”

0 96

சர்வதேசத்தைத் திசைதிருப்புவதற்காக ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகவே வரவு – செலவுத்திட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கென நிதியொதுக்கப்பட்டுள்ளமையைப் பார்க்கின்றோம் என்று வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாவதி தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அறிந்துகொள்வதும் எமக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதுமே எமது ஒரேயொரு எதிர்பார்ப்பாக இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், நாங்கள் தற்போதைய அரசாங்கத்திடமிருந்து அந்த நீதியைக்கூட எதிர்பார்க்கவில்லை. அவ்வாறிருக்கையில் நிதியை வழங்கி எமது வாயை அடைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவால் நேற்று  வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான வரவு-  செலவுத்திட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கென 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டிற்கான வரவு – செலவுத்திட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான இழப்பீட்டை வழங்குவதற்குரிய நிதியொதுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தி தெற்கைத் தளமாகக்கொண்டியங்கும் காணாமல்போனோரின் குடும்ப ஒன்றியத்தின் பிரதிநிதிகள் கடந்த வியாழக்கிழமை நீதியமைச்சு, நிதியமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக அமைதிவழிப்போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

இருப்பினும் வட, கிழக்கு மாகாணங்களில் நீதிகோரி தொடர்ச்சியாகக் கவனயீர்ப்புப்போராட்டங்களில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசாங்கத்தினால் வழங்கப்படும் நட்டஈடு தமக்குத் தேவையில்லை. 

மாறாக தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துவதுடன் அதற்கான நீதிநிலைநாட்டப்படவேண்டும் என்ற நிலைபாட்டையே கடந்த காலங்களிலிருந்து வெளிப்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில் காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தைப் பொறுத்தமட்டில் கடந்த காலத்தில் பெருமளவிற்கு நாட்டம் காண்பிக்காத தற்போதைய அரசாங்கம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்குவதற்கென வரவு, செலவுத்திட்டத்தில் நிதியொதுக்கீடு செய்திருப்பது குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில்,

‘காணாமலாக்கப்பட்ட எமது உறவினர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அறிந்துகொள்வதும் எமக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதுமே எமது ஒரேயொரு தேவையாக இருக்கின்றது. 

ஆனால் நாங்கள் தற்போதைய அரசாங்கத்திடமிருந்து அந்த நீதியைக்கூட எதிர்பார்க்கவில்லை. அவ்வாறிருக்கையில் நிதியை வழங்கி எமது வாயை அடைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.

அதேவேளை வரவு, செலவுத்திட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான நட்டஈட்டை வழங்குவதற்கென நிதியொதுக்கப்பட்டிருப்பதாக சர்வதேசத்திடம் காண்பித்து, அவர்களிடமிருந்து அதற்குரிய நிதியைப் பெற்றுக்கொள்வதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 

அதன்மூலம் கிடைக்கின்ற நிதியைப் பயன்படுத்தி தெற்கில் இழப்பீட்டைக்கோருகின்ற காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நட்டஈட்டை வழங்கிவிட்டு, அதன்மூலம் அண்மைக்காலத்தில் அரசாங்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துள்ள சிங்களவர்களின் மனங்களைக் குளிர்விப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவரைகாலமும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாக எமது பிரச்சினை சர்வதேசமயப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

ஆனால் தெற்கில் காணாமலாக்கப்பட்ட குடும்பங்களின் பிரச்சினை சர்வதேசத்தை எட்டியிருக்கவில்லை.

இருப்பினும் சர்வதேசத்திடமிருந்து நிதியைப்பெற்று தெற்கிலுள்ள காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு அதனை வழங்குவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தின் மூலம் எமது பிரச்சினையில் கவனத்தைக் குவித்திருக்கின்ற சர்வதேச சமூகம் திசைதிருப்பப்படும்’ என்று சுட்டிக்காட்டினார்.

அதேவேளை இதுபற்றி கேசரிக்குக் கருத்துத் தெரிவித்த வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்டக்கிளை தலைவி மதியசுரேஷ் ஈஸ்வரி கூறியதாவது:

‘சர்வதேசத்தைத் திசைதிருப்புவதற்காக ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகவே வரவு, செலவுத்திட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கென நிதியொதுக்கப்பட்டுள்ளமையைப் பார்க்கின்றோம். 

அரசாங்கம் இதனைக் காண்பித்து சர்வதேச சமூகத்திடமிருந்து நிதியைப் பெற்றுக்கொண்டாலும், அதனை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கும் என்ற நம்பிக்கை எமக்கில்லை.

காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தைக் கையாளும் பொறுப்பு அண்மையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சரொருவரிடம் கையளிக்கப்பட்டது. ஆனால் அவர் இப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்குவார் என்ற நம்பிக்கை எமக்கில்லை. 

தற்போது வரவு, செலவுத்திட்டத்தின் ஊடாக நீதிக்கான எமது தொடர் போராட்டங்களை முறியடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இத்தகைய செயற்பாடுகளால் நாங்கள் எமது போராட்டங்களை நிறுத்திக்கொள்ளமாட்டோம் என்று குறிப்பிட்டார்.  

Leave A Reply

Your email address will not be published.