Developed by - Tamilosai
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள இல்லத்திற்கு முன்னால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் மற்றும் பத்தரமுல்லை சிலரத்ன தேரர் தலைமையிலான குழுவுக்கும் இடையிலேயே இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
தேரர் தலைமையிலான ஆர்ப்பாட்டக்குழுவொன்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு முன்பாக போராட்டங்களை மேற்கொள்ளப்போவதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
குருந்தூர்மலையில் தமிழ் மக்கள் பொங்கல் வைத்து வழிபாடுகளில் ஈடுபட்டதை அடுத்து அவர் இவ்விரு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதன்படி, தமிழ் அரசியல்வாதிகள் பலர் தெற்கில் சிங்களவர்களுடன் ஒற்றுமையாக வாழ்கின்றனர் எனவும், அதற்கான சுதந்திரத்தை சிங்கள மக்கள் தந்திருக்கிறார்கள் எனவும் தெரிவித்த உதய கம்மன்பில வடக்கிலுள்ள சிங்கள மக்களின் சுதந்திரத்தை தமிழ் அரசியல்வாதிகள் பறிப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நிலையில், வடக்கில் சிங்கள மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமைகளை வென்றெடுப்பதற்காக கொழும்பில் வசிக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் முன்பாக போராட்டங்களை மேற்கொள்ள இருக்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதன் முதற்கட்டமாக கொழும்பில் உள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு முன்பாக போராட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளோம் எனவும் இந்தப் போராட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அழைப்பு விடுத்திருந்தார்.