Developed by - Tamilosai
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவில் பங்கேற்க இலங்கையைச் சேர்ந்த 50 பேர், இந்தியாவைச் சேர்ந்த 50 பேர் என மொத்தம் 100 பேர் மட்டும் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.
கச்சத்தீவு தேவாலய விழா ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறும். பாரம்பரியமாக இந்த விழாவில் இந்தியா மற்றும் இலங்கை மீனவர்கள் கலந்து கொள்வர்.
கச்சத்தீவு இலங்கை வசம் இருப்பதால், அங்கு சென்று வர அந்நாட்டின் அனுமதியை இந்திய மீனவர்கள் பெற்றிருப்பது கட்டாயமாகும்.
இந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக கச்சத்தீவுக்கு இந்திய மீனவர்களை அனுமதிக்க முடியாது என்று முதலில் இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர்.
இதைத்தொடர்ந்து தமிழக மீனவர்களை கச்சத்தீவுக்குள்அனுமதிக்க கோரி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை இந்திய நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு நேரில் சந்தித்து வலியுறுத்தினார். பிறகு அவர் இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்பு கொண்டு தமிழக முதல்வரின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதைத்தொடர்ந்து தமிழக அரசு கோரிக்கையை இலங்கை அரசு ஏற்கும் என்று டக்ளஸ் தேவானந்தா கூறியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது கச்சத்தீவு புனித அந்தோணி தேவாலய திருவிழாவில் இலங்கையைச் சேர்ந்த 50 பேரும் இந்தியாவைச் சேர்ந்த 50 பேரும் பங்கேற்க அனுமதிப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது