தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இலங்கை ஒற்றையாட்சியை நிலை நிறுத்தும் ஏமாற்றுவித்தைகளாக அரங்கேறும் ஒரே குப்பையில் ஊறிய மட்டைகளே இந்திய-இலங்கை ஒப்பந்தமும் 13 ஆவது திருத்தமும் தேசிய இனம் என்ற அங்கீகாரத்தைக் குறைத்து பல்லினச் சமூகங்களாக்கும் முயற்சி

0 250

இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஈழத்தமிழர் தேசத்தின் பாரம்பரியத் தாயகமாக ஒன்றிணைந்த வடக்கு கிழக்கை நேர்த்தியாக அங்கீகரிக்கவில்லை. வடக்கு-கிழக்கு தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழிடம் என்று மட்டுப்படுத்தப்பட்ட ஒரு கோட்பாட்டையே முன்வைத்தது. கிழக்கில் மட்டும் நிரந்தர இணைப்புக்கான பொதுவாக்கெடுப்பு என்று தமிழ்த் தேசத்தின் நிலவொருமைப்பாட்டைச் சிக்கலுக்குள்ளாக்கியது. அந்த ஒப்பந்தம் ‘பல்லின சமூகம்’ என்ற சொற்பிரயோகத்தைக் கையாண்டிருப்பதில் ஏதோ விடயம் இருப்பதாகச் சிலர் கருதுகிறார்கள். ஆனால், அது ஒரு பல்லின சமூகமாக நில அடையாளத்தையும் அர்த்தமற்ற அதிகாரப்பகிர்வினூடாக ஈழத்தமிழர்கள் இழப்பதற்கும் பயன்படக்கூடிய சொற்பிரயோகமே. இதே ஒப்பந்தத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் என்றும் சிலர் எண்ணுவது வேடிக்கையானது.

மொழிவாரியான சமஷ்டி அரசு ஒன்றை நோக்கி அரசியல் தீர்வை வழங்கும் வகையில் ஓர் அர்த்தமுள்ள பயணத்தை ஆரம்பிப்பதற்கு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் எந்த நிபந்தனையும் இருக்கவில்லை.

1987 இல் அப்போதைய தமிழர் விடுதலைக்கூட்டணியினர் இந்திய அமைச்சர் ப. சிதம்பரம் 19 டிசம்பர் 1986 இல் வெளியிட்டிருந்த உத்தியோகபூர்வ அறிக்கையை மேற்கோள் காட்டிக் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தையும் பதின்மூன்றையும் போதிக்கும் வரலாற்று மாணாக்கர்கள் இவற்றையெல்லம் மீண்டும் தரிசனம் செய்துவிட்டுத் தமது கருத்துகளை முன்வைப்பது நல்லது.

தமிழர் தேசிய இனப்பிரச்சனைக்குத் தமிழர் முன்வைத்த திம்புக் கோட்பாட்டின் அடிப்படைகள் எவையும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை. தனது புவிசார் நலன் பற்றிய விடயங்களே அங்கு நிபந்தனைகளாயின.

அதற்கு ஈழத்தமிழர் தேசியப் பிரச்சனை பலியிடப்பட்டது. இதே சூழலைத் திருப்பி ஏற்படுத்தும் வலுவே அதற்கு உள்ளது. அதைத் தாண்டிய வலுவான கோரிக்கைகளை முன்வைக்க திம்புக் கோட்பாடுகளை நினைவூட்ட ஏன் தமிழ்த் தேசியக் கூடாமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு வலுவில்லை என்பது அவர்களின் மூளை பற்றியதன்றி, முதுகெலும்பு பற்றிய கேள்வியாகிறது.

இலங்கையின் நிலவொருமைப்பாட்டையும் ஒற்றையாட்சி அரசின் இறைமையையும் இலங்கை அரசு மீது தமிழர் சார்ந்த எந்த ஒரு நிபந்தனையையும் முன்வைக்காமல் இந்தியா இந்திய-இலங்கை ஒப்பந்தம் மூலம் அங்கீகரித்தது.

எல்லாவற்றையும் விட தமிழர்களுக்கு விளங்காத, ஆனால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சமஸ்கிருத மந்திரம் போல இரண்டு வசனங்கள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் உள்ளன. அவற்றைத் தமிழ்ப்படுத்தினால் பின்வருமாறு அமையும் ‘இலங்கையின் அலுவல் மொழி சிங்களம். தமிழும் ஆங்கிலமும் கூட அலுவல் மொழிகளாயிருக்கும்’.

மேற்குறித்த மந்திர வாசகங்களின் தந்திரத்தை விளங்க முதலில் முயற்சிக்கவேண்டும். அப்போது தான், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் ஆரம்பித்து மொழிவாரிச் சமஷ்டியை நோக்கிப் பயணிக்கமுடியுமா என்பதை அறிந்துகொள்ளலாம்.

முதலாவது வசனம் ‘சிங்களமே அரச அலுவல் மொழி’ என்பதும் அடுத்த வசனம், ‘தமிழும் ஆங்கிலமும் அரச அலுவல் மொழிகளாக அல்ல, வெறும் அலுவல் மொழிகளாக மட்டுமே ஆகமுடியும்’ என்பதாகவும், அதேவேளை பௌத்தத்திற்கு முன்னுரிமை என்று இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் எழுதப்பட்டிருப்பதற்கு ஒப்பான ஒரு அங்கீகாரத்தைச் சிங்கள மொழிக்குக் கொடுப்பதான தோரணையில் சிங்களத்துக்கும் மொழிரீதியான முன்னுரிமை கொடுக்கலாம் என்பதை இந்தியா இலங்கை ஒற்றையாட்சியோடு அங்கீகரித்து ஒப்புக்கொள்வதாக, வரிகளுக்கும் சொற்களுக்கும் இடையே வாசித்துப் புரிந்துகொள்ளவேண்டும்.

அதாவது எதிர்காலத்தில் மொழிவாரிச் சமஷ்டியை நோக்கிப் பயணிப்பதற்கான பாதையில் ஆரம்பத்திலேயே முட்களைப் போட்டது இந்திய-இலங்கை ஒப்பந்தம். பாரம்பரியத் தாயகத்தின் நிலவொருமைப்பாட்டை கிழக்கில் மட்டும் பொதுவாக்கெடுப்பு நடாத்தி நிரந்தரமாக இரண்டாக உடைப்பதற்கு வழிகோலும் தன்மையும், ஒற்றையாட்சியின் நிலவொருமைப்பாட்டை அங்கீகரிப்பதான போக்கும், ஈழத்தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தை வரலாற்று வாழிடம் என்று சுருக்கிவிடுவதும் இந்த ஒப்பந்தத்தின் முட்களிற் பிரதானமானவை.

முப்பத்து நான்கு வருடங்களுக்குப் பின்னர், சர்வதேச நீதிக்கான பயணத்தின் ஊடாக ஒரு தீர்வை நோக்கிப் பயணிப்பதைத் தமது வழிவரைபடத்தின் முக்கிய வழியாக ஈழத்தமிழர்கள் கருதி முழு ஊக்கத்தோடு செயற்படவேண்டிய சூழலில், சர்வதேச நீதி பற்றிய எந்தக் கடப்பாடும் இல்லாத 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக மேற்கோள் காட்டியிருக்கும் ஜெனீவாத் தீர்மானத்தை மைத்திரி- ரணில் அரசாங்கம்கூட நடைமுறைப்படுத்தத் தவிறியுள்ளது.

ஆனால், ராஜபக்ச அரசாங்கம் அதைச் செய்து முடிக்கச் சித்தமாயுள்ளது என்றும் திரைமறைவில் உடன்பாடுகளைச் சர்வதேச தரப்புகளோடு முற்கூட்டியே எட்டிவிட்டு, தமிழர்களைத் திசைமாறிய பறவைகளாக்கிவிட்டு சர்வதேச நீதிக்கான பயணத்தை நீர்த்துப் போகவைக்கும் சதுரங்க ஆட்டத்தை நடாத்தி வருகின்றது எனவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அப்படியானால் ‘பதின்மூன்றா இந்திய-இலங்கை ஒப்பந்தமா’ ஆரம்பப்புள்ளி என்ற தேவையற்ற விவாதத்தின் மூலம் போலியான எதிர்பார்ப்புகளை ஈழத்தமிழர்களுக்குக் கொடுத்து இறுதியில் இலங்கை அரசே நன்மையடையும்.

‘அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வின்’ ஆரம்பப்புள்ளியாக எதைக் கொள்ளலாம் என்பதில் மக்களுக்கும் ஊடகங்களுக்குமான எந்தத் தெளிவுபடுத்தலையும் சம்பந்தனோ சுமந்திரனோ இதுவரை ஏற்படுத்தவில்லை.

இவைபற்றி விவாதிக்கும் போதுகூட, ஒரு புறம் வெறும் கூக்குரல்களையும் அதட்டல்களையும் முன்வைப்பதும் மறுபுறம் பிதற்றல்களை அரங்கேற்றுவதாகவுமே கருத்தரங்குகளில் பங்குபற்றியோரின் கருத்துகள் யாழ்ப்பாணத்திலும் இணைய வெளியிலும் ஊடகங்களிலும் வெளியாகிவருகின்றன.

இதனால், திரைமறைவில் 2021 இன் இறுதி நாட்களில் நடைபெற்றுக்கொண்டிருப்பது என்ன என்று அறிய விரும்பும் பொதுமக்களிடையே கேள்விகள் அதிகரித்துச் செல்கின்றன. இந்தச் சூழலும் இலங்கை அரசுக்கே சாதகமாகிறது.

நிலைமையைச் சுருக்கமாக விளங்குவதற்கு ஓர் அணுகுமுறை தேவை. அதாவது, இலங்கை அரசின் சதியாகவே இந்த விவாதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதையும், இந்த விவாதம் ஒரு திசை திருப்பலே என்ற கருத்தைச் சில கருத்துருவாக்கிகள் முன்வைக்கின்றனர்.

அவர்கள் சொல்வதை நம்புவதற்கு விரும்பாதவர்கள் குறைந்தபட்சம் அவர்கள் சொல்வது போன்ற ஒரு திரைமறைவுச் சூழலை இலங்கை அரசும் சேர்ந்தே செயற்படுத்திவரும் ஆபத்து இருந்தால், நாம் எவ்வாறு அதையும் தாண்டிப் பயணிப்பதற்கான தயார் நிலை இருக்கவேண்டும் என்ற குறைந்த பட்சக் கரிசனையிலாவது அதைப் புறக்கணிக்காது கருத்திற்கொள்ளவேண்டும்.

கடும்போக்குத் தமிழ்த்தேசியவாதிகளே இவ்வாறான ஐயங்களை ஏற்படுத்துகிறார்கள் என்று எழுந்தமானமான முடிவுகளுக்கு வருவது புத்திக்கூர்மையானதல்ல.

ஒருபுறம் ஈழத்தமிழர்களைத் தேசிய இனம் (தேசம்) என்ற கோரிக்கையில் இருந்தும், ஒன்றிணைந்த வடக்கு-கிழக்கு மரபுவழித் தமிழர் தாயகம் என்ற விடயத்தில் இருந்தும் குறைத்து, அவர்களை வெறும் ஒரு சமூகமாக அல்லது ஒரு சிறுபான்மையாகக் குறுக்கிவிடுவதும், சுயநிர்ணய உரிமை பற்றிய பேச்சைத் தமிழர்களின் அரசியல் அகராதியில் இருந்தே அகற்றிவிடுவதும் இங்கே பிரதான நோக்கம்.

மறுபுறம் சர்வதேச நீதியை இன அழிப்புக்கான விசாரணையை நோக்கித் திருப்பாமல் அதை மேலும் நீர்த்துப்போகச் செய்வதற்குமான உத்தியாக இலங்கை அரசின் இராஜதந்திரிகள் திரைமறைவில் இயங்கும் சில வெளிநாட்டு இராஜதந்திரிகளின் ஆலோசனைகளுக்கமைய வகுத்திருக்கும் சமயோசிதத் திட்டமே இன்று அரங்கேறிக்கொண்டிருக்கும் பதின்மூன்றா, இந்திய-இலங்கை ஒப்பந்தமா என்ற வாதப் பிரதிவாதங்களுக்கான பின்னணி என்று ஓர் எடுகோளாகவேனும் இந்த நிலையை அணுகவேண்டும்.

அதேவேளை, ‘ரிம் இல்லாத முன் சில்லுச் சைக்கிளை ஓட்டமாட்டேன் என்று நான் சொல்லமாட்டேன், ஆனால் ரிம் உள்ள காற்றுப் போன பின் சில்லிருக்கும் எந்தச் துவிச்சக்கரவண்டியின் பெடலிலும் நான் காலே வைக்கமாட்டேன்’ என்று சொன்னால் எப்படியிருக்குமோ, அதைப் போல, ‘ஒரு நாடு இரு தேசம்’ என்று கொள்கைப் பிரகடனம் செய்து தமிழ்த் தேசிய முழக்கம் செய்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் அணியினர், ‘இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தாம் நிராகரிக்கவில்லை, ஆனால் பதின்மூன்றை ஆரம்பப்புள்ளியாகக் கொள்ளமுடியாது’ என்று கூறிப் பலரின் நெற்றியைச் சுருக்கவைத்துள்ளார்கள்.

அதாவது, சுமந்திரன் சொல்வதற்கும் கஜேந்திரகுமார் சொல்வதற்கும் இடையில் என்ன வித்தியாசம் என்பது மிகவும் நுட்பமானதாயிருக்கிறது.

அது ஒருபுறம் இருக்க, இலங்கை அரசின் சமயோசித அணுகுமுறை என்னவென்பதைப் பார்ப்போம்.

அகில இலங்கை பூராவும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளுக்கான தீர்வுக்கான கோரிக்கையாக வடக்கு-கிழக்கை மையங்கொண்ட தமிழ்த் தேசியச் சிக்கலை மாற்றிவிடுவது என்பதாகும். இதற்கான சர்வதேச மற்றும் மனித உரிமைச் சூழலும் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னான, மற்றும் கொவிட் தாக்கத்துக்கும் பின்னான இலங்கைத் தீவுசார் சர்வதேச மற்றும் புவிசார் அரசியலில் ஏற்பட்டிருக்கிறது.

தீவு முழுவதுமான முஸ்லிம்களின் தொகை முழுத்தீவின் சனத்தொகையின் ஒன்பது வீதம். அத்தோடு மலையகத் தமிழர் நான்கு வீதமானவர்கள். இரண்டையும் சேர்த்தால் பதின்மூன்று வீதம். முழுத் தீவிலும் ஈழத்தமிழர்கள் பதினொரு வீதத்தினரே.

பதின்மூன்று வீதத்தை அல்லது ஒன்பது வீதத்தை வைத்து பதினொரு வீதத்தின் வடக்கு-கிழக்கு சார்ந்த பிரதான அரசியற் கோரிக்கைகளுக்கு நிரந்தரப் பூட்டு ஒன்றை ஒற்றையாட்சி முறைக்குள் கட்டுப்பட்ட ‘அதிகாரப் பகிர்வு’ என்ற மாயையைப் பயன்படுத்தி போட்டு முடக்கிவிடலாம் என்பதே அந்தச் சமயோசித் திட்டமாக இருக்கும் நிகழ்தகவுக்கு வாய்ப்பிருக்கிறது.

இங்கே ‘அர்த்தமுள்ள’ அதிகாரப்பகிர்வு இருக்கிறதா இல்லையா என்பது அந்த நிகழ்ச்சிநிரலே மாயையாக இருந்தால், அர்த்தமற்றதாகிவிடும். ஏனெனில், ஒற்றையாட்சிக்குள் பகிரப்படும் எதுவும் திருப்பிப் பெறக்கூடியதாக இருக்கும்போது, அல்லது மேவப்படக்கூடியதாக இருக்கும் போது, அர்த்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதைப்போலவே எங்கே ஆரம்பிக்கிறோம், இந்திய-இலங்கை ஒப்பந்தத்திலா அல்லது பதின்மூன்றிலா என்பதற்கும் அர்த்தமில்லை.

உண்மையிலேயே இந்த வீதங்களுக்கு அர்த்தமுள்ளவகையில் அரசியல்வாதிகளின் தெரிவும் இல்லை என்பதும் நாம் இங்கு கருத்திற்கொள்ளவேண்டியது.

அதேபோல, அர்த்தமற்ற ஆபத்துநிறைந்த அர்த்தமற்ற இந்த நாடகத்தில் பகிரங்கமாக நடிக்கும் பல கதாபாத்திரங்கள் போலவே, மேடைக்கு வராத கதாபாத்திரங்கள் பலவும் நடிக்காது நடிக்கின்ற வாய்ப்பும் இருக்கிறது. கண்ணால் காண்பதும் பொய், காதாற் கேட்பதும் பொய், தீர விசாரித்தலே மெய் என்பதை இங்கு கருத்திற்கொள்வது அவசியமாகிறது.

தமிழ் பேசும் அரசியல் வாதிகளில் இலங்கை அரசோடு பகிரங்கமாக ஒத்துப்போகாத கட்சித் தலைவர்களிற் சிலரையும், நாடாளுமன்ற இருக்கையுடைய அரசியல்வாதிகளையும் அந்தரங்கமான முறைகளிற் கையாண்டு, பிரதான விவாதத்தை ‘இந்திய-இலங்கை ஒப்பந்தமா? பதின்மூன்றா?’ என்ற பலனற்ற விவாதத்துக்குள் மட்டுப்படுத்தி வைத்திருப்பது என்பது ‘குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்ட’ வைக்கும் உத்தி. இதுவே இலங்கை அரச இராஜதந்திரிகளின் சமயோசித அணுகுமுறையாக இருக்கலாம் என்பது எமது தீர விசாரித்தலுக்குரிய அணுகுமுறையாக இருக்கவேண்டும்.

இந்தக் குண்டுச் சட்டியே யாழ்ப்பாணத்தின் திண்ணை விடுதியிலும் கொழும்பின் குளாபல் ரவர் விடுதியிலும் விரிந்து சுருங்கிக்கொண்டிருக்கலாம் அல்லவா?

ஆக, குண்டுச் சட்டியின் சூடு ஆறாமல் இருக்கும் போது பசில் ராஜபக்ச மீண்டும் தனது அடுத்த அமெரிக்கத் திக் விஜயத்தை முடித்திருக்கிறார் என்பதும், திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்குக் கொடுப்பது பற்றிய விடயம் சூடுபிடித்துள்ளது என்பதையும் செய்திகளைப் பின்பற்றுவோர் கவனித்திருப்பார்கள்.

‘காகம் இருக்கப் பனம்பழம் விழுவது போல்’ சில விடயங்கள் தென்படலாம் என்ற அப்பாவித்தனமான பார்வைகளுக்கு அரசியலில் இடம் கொடுக்கக் கூடாது. மாறாக பனம்பழம் விழுவதற்குத் தயார்ப்படுத்தப்பட்டு அதன் மேல் காகத்தை இருக்கவைக்கலாம் என்பதில் சிங்கள இராஜதந்திரிகள் கைதேர்ந்தவர்கள் என்பதை நாம் கருத்திற்கொள்ளவேண்டும்.

அழுகிப் போன குப்பையில் ஊறிக்கிடக்கும் சகதியின் மேல் வெள்ளைச் சாம்பலைக கொட்டிவிட்டு அதைத் தமிழ் மக்களுக்குக் காட்டி வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணுமாறு பல தமிழ் அரசியல்வாதிகளும் கருத்துருவாக்கிகளும் பதின்மூன்று மற்றும் இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்பவை பற்றிய போதனைகளை வழங்கிவருகிறார்கள்.

இவர்களில் ஒரு சாரார், பதின்மூன்று குப்பைதான் ஆனால் அதைச் சுற்றியிருக்கும் இந்திய-இலஙகை ஒப்பந்தம் எனும் சாம்பல் வெள்ளையல்லவா என்று வாதிடுகிறார்கள்.

இன்னொரு வகையினர், பதின்மூன்றையே வெள்ளை என்று எண்ணுவோம் என்று சுமந்திரனான சுமந்திரனே பதின்மூன்றைக் குப்பை என்று யாழ்ப்பாணத்தில் அருவருப்பாக வருணிப்பதற்கு முன்னரே சுண்ணாம்பு என்று அவசரப்பட்டுப் போதிக்கமுற்பட்டு வெட்கித்து நிற்பதையும் காணமுடிகிறது.

இவ்வாறாக, தமிழ்த் தேசிய அரசியலில், ஆழ்மன அழுக்குகளை அப்பட்டமாக அடையாளங்காட்ட வைத்து, 2022 ஆம் ஆண்டு ஆரம்பிக்கிறது.

புள்ளிகள் தொடுகின்றன. கோடுகள் தெளிவாகின்றன. பாதைகளும் தெரிந்துவிட்டால் பயணம் தூரமில்லை என்றாகிவிடும்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் இந்தியப் பாதுகாப்பே முக்கியமானது. அது தொடர்பான இந்தியப் பிரதமருக்கும் இலங்கை ஜனாதிபதிக்குமிடையிற் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து பரிமாறப்பட்ட புரிதற் கடிதங்களில் தமிழ் பேசும் மக்களின் தாயகத்திலுள்ள திருகோணமலையின் இரண்டாம் உலகப் போர்க்கால எண்ணெய்க்குதங்களை இந்தியாவிடம் கையளிப்பது என்ற விடயமும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் அதுவும் பன்னிரெண்டு ஆண்டுகள் சென்றுவிட்டதொரு நிலையில் இந்தோ-பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பை மையமாகக் கொண்டு திருகோணமலையில் உள்ள எண்ணெய்க்குதங்களை இந்தியாவுக்கு வழங்க இலங்கை தற்போது இணங்கியுள்ளது என்பது இந்த வாரம் வியாழக்கிழமை செய்தியாகப் பல இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

திருகோணமலையில் தற்போது லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் 14 எண்ணெய் குதங்கள் மேலும் 50 வருடங்களுக்கு அதே இந்திய நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்படுமென இலங்கை ஒற்றையாட்சி அரசின் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மீதமுள்ள 61 எண்ணெய் குதங்கள் திருகோணமலை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் கூட்டாக நிர்வகிக்கப்படும் என்றும் அவற்றில் CPC 51% பங்குகளையும், LIOC 49% பங்குகளையும் கொண்டிருக்கும் என்றும் அமைச்சர் உயதகம்மன்பில கூறியுள்ளார்.

ஆகவே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் மீண்டும் அமெரிக்க-இந்திய அணி தமக்குரிய புவிசார் அரசியல் நலன்களையே பேண முற்படுகின்றன என்பது வெள்ளிடைமலை.

இதற்காகவே ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான நிரந்தர அரசியல் தீர்வு என்பதை இலங்கை ஒற்றையாட்சியின் கீழ் முடக்குவதற்கான உத்திகளாக ரெலோ தலைமையிலான அணியும் சுமந்திரன் தலைமயிலான அணியும் கிட்டத்தட்ட ஒரே புள்ளிக்கு அண்மையாகக் கொண்டுவரப்பட்டிருக்கலாம்.

அதாவது, ‘அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கம்’ என்ற பெயரில் அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் இலங்கை அரசின் பேராசரியர் ஜீ. எல். பீரிஸ், மற்றும் முன்னாள் அமைச்சரும் இந்நாள் இலங்கைக்கான அமைச்சரவைத் தர இந்தியத் தூதுவருமான மிலிந்த மொராகொட போன்றோர் மறைமுகமாக இணங்கியிருப்பதாகக் கருதப்படும் ஒற்றையாட்சி இலங்கை அரசின் வெளியுறவு இராஜதந்திரத்துக்குப் பலியாகும் அடுத்த கட்டமாக இந்த நகர்வுகள் அரேங்கேற்றப்படுகின்றனவா என்ற கேள்வி எழுந்திருப்பது இந்த நிகழ்வுகளின் பின்னணியில் பொருத்தமான பார்வையாகவே படுகின்றது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர், மீண்டும் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தற்போது கொழும்பு திரும்பியுள்ள நிலையில், எதிர்வரும் பத்தாம் திகதி இந்தியாவுக்கு மீண்டும் பயணம் செய்யவுள்ளார். கடந்த மாதம் இந்தியாவுக்குச் சென்றிருந்த அவர் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்தித்திருக்கவில்லை.

ஆனால், மோடியின் பலத்துக்கு நிகரான பலமுடைய அமைச்சரவை அந்தள்துள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்புச் செயலரும் இந்தியாவின் ஜேம்ஸ் பொன்ட் என வர்ணிக்கப்படும் புவிசார் அரசியலையும் இராணுவ நலன்களையும் ஒருசேரக் கையாளும் அஜித் டோவலைச் சந்தித்திருந்தார். இம்முறை மோடியையும் பசில் சந்திப்பாரென்று கொழும்பு ஊடகங்கள் கூறத் தொடங்கியுள்ளன.

பசிலின் கடந்த பயணத்தின் பின் அவர் நிதியமைச்சரானார், தற்போதைய அமெரிக்கப் பயணத்தின் பின் மேலும் அவரின் அமைச்சுப் பதவி உயரலாம் எனவும் ஊகங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், சீனாவை வடக்கு நோக்கிப் பயணிக்கச் செய்து, இந்தியாவுடனான பேரம்பேசலை மேலும் செழுமைப்படுத்துவது ஒரு புறமும், மறுபுறம் பதிலாகச் சீனாவும், ராஜபக்ச தரப்புக்கு மாற்றான எதிர்க்கட்சித் தரப்புகளுடனும் நிதியுதவித் திட்டங்களைத் தெற்கில் ஆரம்பித்திருப்பதும், புவிசார்ப் போட்டியில் இலங்கை அமெரிக்காவுடன் நெருங்குகிறது என்ற நெருக்கடிக்குள் சீனத் தரப்புச் செல்ல ஆரம்பித்திருப்பதைப் புடம்போட்டுக் காட்டுகிறது.

ஒருவரை ஒருவர் தூண்டிவிட்டுப் பயன்படுத்தும் புவிசார் அரசியலை முன்னாள் அமெரிக்கத் தூதுவர் றொபேட் பிளேக் ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கொழும்பு வந்து கோத்தாபய ராஜபக்சவுக்குப் புகழாரம் சூட்டிய போது நேரடியாகத் தெரிவித்திருந்த ஒரு விடயம்.

ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான நிரந்த அரசியல் தீர்வு என்பது அகில இலங்கை வாழ் முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் என்ற அடிப்படையில் சிறிய சமூகங்களாகப் பிரிக்கப்பட்டு, தேசம் என்ற நிலையில் இருந்து கீழிறங்கி மக்கள் அல்லது சமூகங்களாக இலங்கை ஒற்றையாட்சியின் கீழ் செல்லுபடியாகக்கூடிய ஏற்பாடுகள் மாத்திரமே தற்போதைய நகர்வுகளாக விரிவது போல் சுருங்கியிருக்கின்றன என்பது பட்டவர்த்தனமாகிறது.

அமெரிக்காவுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கனடாவுக்குச் சென்றிருந்தபோது, வடக்குக் கிழக்கு முஸ்லிம்களையும் இணைத்தே அதிகாரப்பரவலாக்கலைச் செய்ய வேண்டுமென அமெரிக்கா கூறியதாகச் சொல்லியிருந்தமை நினைவிருக்கலாம்.

அதேவேளை, கனடாவில் எதிர்ப்பைச் சந்தித்தபோது கூட பதின்மூன்றாம் சட்டத்திருத்தத்தை அவரோ, சாணக்கியனோ மறுத்துரைத்திருக்கவில்லை. இறுதியாக, மறுத்துரைப்பு யாழ்ப்பாணத்திலேயே, அதுவும் ரெலோவுடனான பக்க முரண்பாட்டிலேயே வெளிப்பட்டிருந்தது.

ஆனால், நடைமுறையில் வடக்குக் கிழக்கு இணைந்த நிரந்தர அரசியல் தீர்வுக்காக முஸ்லிம் மக்களை இணைத்துக் கொள்ளக்கூடிய அரசியல் வேலைத்திட்டங்கள் எவற்றையேனும் தமிழரசுக் கட்சியோ, அல்லது வேறெந்தக் கட்சிகளோ அர்த்தமுள்ள வகையில் முன்னெடுத்திருக்கவில்லை. இந்த நிலையில் வெறுமனே அமெரிக்காவை மாத்திரம் முன்னே காட்டி சுமந்திரன் அணி பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றது.

இலங்கையில் சிங்கள ஆட்சியாளர்களுடன் முரண்படாத முறையில் தமது புவிசார் அரசியல் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் அமெரிக்க-இந்தியா அரசுகளுக்கு இருக்கின்றது.

அதனால் ஈழத்தமிழர் விவகாரத்தில் இலங்கை விரும்பும் தீர்வுக்குரிய நகர்வுகளையே அமெரிக்க-இந்திய அரசுகள் மேற்கொள்ளும் என்பதற்குச் சுமந்திரன், செல்வம் என்ற இரு அணிகளின் நகர்வுகள் கட்டியம் கூறி நிற்கின்றன.

அதேவேளை, வடக்குக் கிழக்கு முஸ்லிம் மக்கள் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் ஈழத்தமிழ் மக்களோடு இணைந்து பயணித்தால் மாத்திரமே அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்த முடியுமென பேராசிரியர் அமீர் அலி கூர்மை இணையத்தளத்திற்கு கொழும்பில் 2018 ஆம் ஆண்டு வழங்கிய பேட்டியில் சொல்லியிருந்தார். அந்தப் பேட்டி முழுமையாக இந்தக் கட்டுரையோடு இங்கு பிரசுரமாகிறது.

தமிழ் முஸ்லிம் உறவு பற்றியும், முஸ்லிம் காங்கிரசின் அரசியல் பற்றியும் அவரின் பார்வை தமிழ் வாசகர்களுக்கு நினைவுபடுத்தப்படவேண்டியது என்பதும், இந்தக் காணொளி நேர்காணல் ஈஸ்டர் தாக்குதலுக்கும் முற்பட்டது.

ஆகவே வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சி அதிகாரத்துடன் கூடிய அரசியல் விடுதலைப் பயணத்தில் முஸ்லிம் கட்சிகள் இணைய வேண்டிய சந்தர்ப்பம் இது. ஆனால் தேசத்தைக் கட்டியெழுப்புவதாகக் கூறிக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கட்சிகள் தேர்தல் அரசியலில் மாத்திரம் கவனம் செலுத்துகின்றன.

தமிழ் மக்களுக்கும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்குமான உறவு குழற் புட்டில் இருக்கும் தேங்காய்ப் பூவும் புட்டும் போலவே இருந்துவருவாக அவர் கூறிவந்துள்ளார். அவர் கூட, பதின்மூன்றையோ அல்லது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையோ ஆதரிக்கக் கூடும்.

எனினும், வடக்கு-கிழக்கிற்குள் செய்யவேண்டிய ‘வீட்டுவேலை’ நிறைய வீட்டுக் கட்சியான தமிழரசுக் கட்சிக்கும் அந்த அடையாளத்தில் அரசியலை ஓட்டிக்கொண்டிருக்கும் ஏனைய கட்சிகளுக்கும் மட்டுமல்ல, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் காலத்தின் கட்டாயமான பணியாக அமைகிறது.

தமிழ் பேசும் முஸ்லிம்கள் பற்றிய புரிதலும், அவர்களோடு மேற்கொள்ளப்படவேண்டிய தமிழ்த் தேசியம் சார்ந்த புரிதலும் ஆழமானவை.

ஈழத்தமிழர்களோடு பேரம்பேசும் போது தம்மையும் ஒரு தேசிய இனமாக வர்ணிக்க முற்படும் தமிழ் பேசும் முஸ்லிம்கள், இலங்கை அரசோடு பேரம் பேசும் போது கூட தம்மை ஒரு சிறுபான்மையாகவே கருதும் மனநிலையில் இருப்பதும் சலுகைகளுக்காக உரிமை அரசியலைக் கைவிட்டுப் பயணித்தே பழகிப்போன அவர்களின் அரசியலும் அடிப்படை மாற்றங்களைக் காணாதுவிடின், தம்மோடு சேர்ந்து ஏனைய மக்களையும் படுகுழிக்குள் தள்ளிவிடும் ஆபத்தான அரசியலே அவர்களிடமிருந்து வெளிப்படும்.

அந்த ஆபத்தைப் புரிந்துகொண்டு முதலில் வடக்கு-கிழக்குக்குள் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்களோடு தமிழர் தரப்புகள் ஒன்றிணைந்து பேசவேண்டும். அதன் பின்னரே வடக்கு-கிழக்குக்கு அப்பால் வாழும் தமிழ் பேசும் மக்கள் பற்றிய உரையாடல் தொடரப்படவேண்டும்.

ஏனென்றால், தமிழ்த் தேசிய அரசியலும் அதன்பாற்பட்ட கோரிக்கைகளும் அகில இலங்கை அரசியலுக்குள் தொக்குநின்று சுருங்கிவிடமுடியாதவை.

Leave A Reply

Your email address will not be published.