தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஒரே தீர்வு சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது – ஹர்ஷ டி சில்வா

0 177

கடன்களில் இருந்து மீளவும், மக்களை பாதுகாக்கவும் எமக்கு இருக்கும் ஒரே தீர்வு சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது மட்டுமேயாகும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சபையில் தெரிவித்தார். 

அவசர சிகிச்சை பிரிவிற்கு ஒப்படைக்க வேண்டிய குழந்தைபோல் இன்று எமது மக்களும் நெருக்கடியில் உள்ளனர், சர்வதேச நாணய நிதியத்தை நிராகரித்தால் 220 இலட்சம் மக்களுக்கும் பட்டினியும், பஞ்சமுமே ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கைத்தொழில் அமைச்சு மற்றும் பிரம்புகள்,பித்தளை மட்பாண்டங்கள் ,மரப்பொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவற்றை கூறினார்.

மத்திய வங்கியின் கையிருப்பில் உள்ள வெளிநாட்டு கையிருப்பு தொகையை மத்திய வங்கி நேற்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் கையிருப்பானது 1587 மில்லியன் டொலர்கள் எனவும், முன்னைய மாதத்தை விடவும் 30 வீதத்தினால் குறைவடைந்துள்ளது எனவும், கையிருப்பில் உள்ள திரவ நாணயம் 1009 மில்லியன் எனவும் இது நாற்பது வீத குறைவு எனவும் மத்திய வங்கி கூறியுள்ளது. அப்படியென்றால் கையிருப்பில் உள்ள திரவ நாணயமாக ஒரு பில்லியன் டொலர்கள் மட்டுமே  உள்ளது.

இந்நிலையில் தேசிய வங்கிகளிடம் இருந்து மத்திய வங்கி பெற்றுக்கொண்ட குறுகியகால கடன்களாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்திற்கு மாத்திரம் 114 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியுள்ளது. ஏனைய கடன்களாக 1137 மில்லியன் டொலர்களும் அதற்கு வட்டியாக 194.7 மில்லியன் டொலர்களையும் செலுத்த வேண்டியுள்ளது. 

எனவே கையிருப்பில் உள்ள நிதியில் இவற்றை செலுத்தினால் ஜனவரி மாதத்தில் வெறுமனே 140 மில்லியன் டொலர்கள் மட்டுமே மிஞ்சும். அடுத்த நாடு ஆரம்பிக்கும் வேளையில் எம்மிடம் பணம் இருக்காது. இவ்வாறு ஒருபோதும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டதில்லை.  அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் மொத்தமாக 4843 மில்லியன் அமெரிக்க டொலர்களை மொத்த கடனாக செலுத்த வேண்டியுள்ள நிலையில் இப்போது எமது கையிருப்பில் வெறும் 140 மில்லியன் டொலர்களே உள்ளது.

இது மிகப்பெரிய நெடுக்கடியை நாட்டில் ஏற்படுத்தப்போகின்றது. ஆகவே அரசாங்கமும் நிதி அமைச்சரும் பொறுப்புடன் செயற்படாது போனால் 220 இலட்சம் மக்களுக்கும் உணவு இல்லாது, மருந்துகள் இல்லாது, எரிபொருள் இல்லாது பாதிக்கப்படும் நிலைமை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.