தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு தொகையாக வழங்கியுள்ளனர் – அலி சப்ரி

0 427

விபத்துக்குள்ளாகி இலங்கை கடல் எல்லைக்குள் மூழ்கியுள்ள ‘எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பலினால் இலங்கை கடல் வளத்திற்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நட்டஈடாக ஒரு பில்லியன் ரூபா குறித்த நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது மிக சொற்ப பணம் என்றே கருதுகின்றோம் ஆகவே முழுமையான நட்டஈட்டை பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கை கடல் எல்லைக்குள் மூழ்கியுள்ள ‘எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பலின் தற்போதைய நிலைமை மற்றும் கப்பலை அகற்றும் பணிகள் குறித்து கண்காணிக்கும் விதமாக நீதி அமைச்சர் அலி சப்ரி நேற்று உரிய பகுதிக்கு பயணித்திருந்தார்.

இதன் பின்னர் அவர் கருத்து தெரிவிக்கையில்,

‘எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பல் விபத்துக்குள்ளானதை அடுத்து இந்த நிலைமைகளை கையாள கப்பற்துறை அமைச்சு, மீன்பிடித்துறை அமைச்சு, நீதி அமைச்சு, உர உற்பத்தி மற்றும் வழங்கல்கள், இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினிகள் பாவனை ஒழுங்குறுத்துகை அமைச்சு மற்றும் உரிய நிறுவனங்கள் மட்டுமல்லாது இந்த செயற்பாடுகளில் சுயமாக முன்வந்து செயற்படும் நிறுவனங்கள் என்பன ஒன்றிணைந்து இந்த அனர்த்த பாதிப்பில் இருந்து எவ்வாறு மீள்வது என்பது குறித்த வேலைத்திட்டம் ஒன்றினை உருவாக்கிக்கொண்டுள்ளோம். இதில் மூன்று கட்டங்களில் எமது பணிகளை முன்னெடுத்தோம்,

இந்த அனர்த்தத்தில் இருந்து தாக்கங்களை குறைத்துக்கொண்டு இயற்கை பாதிப்புகள் ஏற்படாது எவ்வாறு தவிர்ப்பது என்பதே எமது பிரதான நோக்கமாகவும் இருந்தது. இது குறித்து கப்பல் உரிமையாளர்கள் மற்றும் சிங்கப்பூர் அரசாங்கத்துடன் கலந்துரையாடி இனியும் எண்ணெய் கசிவுகள் ஏற்படாத வகையில் எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது, அதேபோல் குறித்த கப்பலில் கொண்டுவரப்பட்ட 1500ற்கும் அதிமாக கொள்கலன்களில் இருக்கும் பொருட்களினால் கடல் வளம் பாதிக்கப்படாத விதத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தோம்.

அதேபோல், கப்பலை அகற்ற எடுக்கும் வேலைத்திட்டம் என்ன என்பது குறித்தும் ஆராய்ந்தோம். அதற்கான பொறிமுறை ஒன்றினை உருவாக்கிக்கொண்டுள்ளோம். கப்பலில் இருந்த கொள்கலன்களை அகற்றுவதில் 90 வீதமான பணிகள் முடிவுக்கு வந்துள்ளன. அதேபோல் மூழ்கியுள்ள இந்த கப்பலை மீட்கும் பணிகள் ஆகியன முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்காக ஷன்ஹாய் நிறுவனம் எமக்கு உதவி செய்கின்றது. இதுவும் ஐந்து கட்டங்களாக முன்னெடுக்கப்படுகின்றது. கப்பலை அகற்றும் மூன்றாம் கட்ட பணிகளில் இப்போது ஈடுபட்டு வருகின்றோம். கப்பலை விரைவாக வேறு பகுதிக்கு அகற்றும் பணிகள் விரைவில் முன்னெடுக்கப்படும். அரசாங்கம் இந்த விடயங்களில் பொறுப்புடன் செயற்பட்டுக்கொண்டுள்ளது.

எமக்கான நட்டஈடு பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இப்போது வரையிலும் ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு குறித்த நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளது. இது மிக சொற்ப பணம் என்றே கருதுகின்றோம்.

முழுமையான நட்டஈட்டை பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அதேபோல் கப்பலில் உள்ள எண்ணெய் மற்றும் கடினமான பொருட்களும் அகற்றப்பட்டுள்ளன.

அடுத்ததாக சட்ட ஆலோசனைகள் மூலமாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன. அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றுடன் இணைந்தே இந்த பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

அதேபோல் மீனவர் சமூகத்தை பாதுக்காக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இனிமேலும் இவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறாத விதத்தில் நடவடிக்கைகள் எடுக்கவும் அதற்கான உரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.