தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஒப்பாரி வைத்து சவப்பெட்டியை ஏந்தி அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டம்

0 316

 உரத் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், விவசாயிகளைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் பாராளுமன்ற உறுப்பினர்  வடிவேல் சுரேஷ் தலைமையில் அப்புத்தளை நகரில் இன்று பாரிய போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

இதில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தினுடைய தோட்டத் தலைவர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தவும், மலையக மக்களின் இருப்பை உறுதி செய்யவும், அவர்களுடைய தொழில் பிணக்குகள் தொடர்பாகவும்,  பெருந்தோட்ட கம்பனிகளின்  அடாவடி நிர்வாகத்திற்குப் பதிலடி தரும் நோக்குடனும், பதாகைகளை  ஏந்தியவாறு கூச்சலிட்டபடி இப்போராட்டம்  இடம்பெற்றது.
குறித்த போராட்டத்தால் கொழும்பு – பதுளை பிரதான வீதி வாகன நெரிசலால் ஸ்தம்பித்தது.

ஒப்பாரி வைத்தும், சவப்பெட்டியை ஏந்தியும் போராட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன், தமக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் கோஷம் எழுப்பினர்.

இதன்போது கருத்து தெரிவித்த வடிவேல் சுரேஷ்:  

அனைத்து வளங்களும் நிறைந்த நம் இலங்கை திருநாடு இன்று வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கின்றது.

குழந்தைகள் குடிப்பதற்கு பால் மா இல்லை, அரிசி தட்டுப்பாடு, உரத்தட்டுப்பாடு, பெருந்தோட்ட மக்கள் தேயிலை கொழுந்தை உண்ண வேண்டிய அவல நிலை. 


மேலும் 1000 ரூபாய் சம்பளம் என்ற கபட நாடகத்தில் சிக்கித் தவிக்கின்ற பெருந்தோட்ட மலையக மக்களைத் தொடர்ந்து வஞ்சித்து கொண்டிருக்கின்ற பெருந் தோட்ட நிர்வாகங்கள். எமது  பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு.  

மலையக மக்களின் உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் இருப்பையும் தக்க வைத்துக்கொள்ள இன்று வீதிக்கு இறங்கி இருக்கின்றோம். இது முடிவல்ல ஆரம்பம் என அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.