Developed by - Tamilosai
ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் மிகப்பெரிய போரை முன்னெடுப்பதற்கு ரஷ்யா திட்டமிட்டு வருவதாக பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் (Boris Johnson) தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டமானது ஏற்கனவே சில இடங்களில் ஆரம்பித்துவிட்டமைக்கான அறிகுறிகள் காணப்படுவதாக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் அவர் தெரிவித்ததாவது,
“உக்ரைன் தலைநகர் கீவ்வை சுற்றி வளைக்கும் படையெடுப்பை ரஷ்யா முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாக உளவுத்துறை தெரிவிக்கிறன.
அந்த வகையில் ரஷ்யாவிற்கு எதிராக முன்னர் பரிந்துரைக்கப்பட்டதை விட மேலும் அதிகமான பொருளாதாரத் தடைகளை பிரித்தானியா கொண்டுவரும்.
பிரித்தானியாவும அமெரிக்காவும் ரஷ்ய நிறுவனங்களுடன் “பவுண்ஸ் மற்றும் டொலர்களில் வர்த்தகம் செய்வதை” நிறுத்தும். இந்த நடவடிக்கை மிகவும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தலாம்” என்றார்.
இதனிடையே உக்ரைனுடனான ரஷ்ய மற்றும் பெலரூஸ் எல்லைப் பகுதிகளில் ஒரு இலட்சத்து 69 ஆயிரம் முதல் ஒரு இலட்சத்து 90 ஆயிரம் வரையான ரஷ்ய துருப்புக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா மதிப்பிட்டுள்ளது.
எனினும் இந்த எண்ணிக்கையானது, உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களையும் உள்ளடக்கியது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தின் ஊடாக அல்லாமல், பெலரூஸ் ஊடாக உக்ரைன் தலைநகர் கீவ் வை சுற்றிவளைக்க திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்க அரச தலைவர் ஜோ பைடன் மேற்குலக நாடுகளின் தலைவர்களிடம் கூறியதாகவும் பொறிஸ் ஜோன்சன் மேலும் தெரிவித்துள்ளார்.