Developed by - Tamilosai
வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது, எங்கே எங்கே உறவுகள் எங்கே? கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே? போன்ற கோஷங்களை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எழுப்பியிருந்ததோடு, உங்கள் இராணுவத்தின் உறுதி மொழியை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமல் ஆக்கப்பட்டார்கள்? தமிழ்க் குழந்தைகள் என்ன பயங்கரவாதிகளா? ஐந்து வயதுக் குழந்தையும் ஆயுதம் ஏந்தியதா? போன்ற பதாகைகளை ஏந்தியவண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்:
சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் மூலமே எங்களுக்குத் தீர்வு கிடைக்கும் என நம்பிக்கொண்டிருக்கின்றோம்.
எமக்கு சர்வதேசமே பதில் வழங்க வேண்டும். நாங்கள் ஒவ்வொரு மாதமும் வந்து ஒரு தெருக்கூத்து போடுவது போல் எண்ணலாம்.
ஆனால், நாங்கள் எங்கள் பிள்ளைகள், உறவினர்கள் எனப் பலரை கொடுத்து விட்டு வேதனைக்கு மத்தியிலேயே இந்தப் போராட்டங்களில் ஈடுபடுகின்றோம். நாங்கள் கடந்த 12 வருடமாக வேதனையுடனும், கவலையுடனும் தான் இருக்கின்றோம் எனத் தெரிவித்தனர்.