Developed by - Tamilosai
மட்டக்களப்பு ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு வாவியிலிருந்து மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (16) காலை மீட்கப்பட்ட இச்சடலம் ஆறுமுகத்தான்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை ஸ்ரீதரன் (51) என்பவருடையது என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
நேற்று(15) மாலை வழமைபோன்று தனியாகவே வாவியில் இரவு நேர மீன்பிடிக்குச் செல்லும் இவர் இரவுச் சாப்பாட்டையும் எடுத்துக் கொண்டு தோணியில் வாவிக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.
இன்று(16) காலை அவரது சடலம் வாவியில் மிதப்பதைக் கண்டு சக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்ப்பித்துள்ளனர்.
புதன்கிழமை மாலை வாவியில் பலத்த காற்று வீசியதாகத் தெரிவிக்கும் மீனவர்கள் அதன் காரணமாக தோணி கவிழ்ந்து மீனவர் வாவியில் வீழ்ந்து மூழ்கியிருக்கக் கூடும் என்றும் தெரிவிக்கின்றனர்.
ஏறாவூர் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்