Developed by - Tamilosai
எனது கொடும்பாவியை எரித்தாலும், எனது உருவத்தை சேதப்படுத்தினாலும் சேதனப் பசளையை நடைமுறைப்படுத்தும் திட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுப்போம் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியும், அரசாங்கமும் முன்னெடுத்த இந்தத் தீர்மானத்திலிருந்து நாம் பின் வாங்கமாட்டோம்.
எக்காரணம் கொண்டும் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு வராது. உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் கூட மக்களைப் பட்டினியில் போடாது அரசாங்கம் பார்த்துக்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரப் பிரச்சினை குறித்தும், விவசாயிகள் எதிர்கொள்ளும் நெருக்கடி நிலைமை குறித்தும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றும் போது மஹிந்தானந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இரசாயன உரத்தை நிறுத்தும் ஜனாதிபதியின் நோக்கம் நல்லதே, ஆனால், அவர் எடுத்த தீர்மானத்துடன் எம் அனைவராலும் ஒருமித்த நிலைப்பாட்டில் நிற்க முடியாமல் போயுள்ளது.
எமது அரசாங்கத்தில் பங்காளிகள், உறுப்பினர்கள் சிலர் வெளியில் வேறு காரணிகளை முன்வைத்தனர். அதுவே அரசாங்கமாக நெருக்கடியைச் சந்திக்க நேர்ந்தது.
இன்று விவசாயிகளுக்கு அநாவசிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதனால் தான் அவர்களும் போராட ஆரம்பித்துள்ளனர்.
விவசாயிகளின் அச்சம் நியாயமானதே, ஆனால் அவர்களைத் தூண்டி அரசியல் செய்கின்றனர்.
அவர்கள் உரம் கேட்கும் வேளையில் அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி நீங்கள் வாக்கு கேட்கின்றீர்கள் என்று எதிர்க்கட்சியினரை நோக்கி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.