தமிழ் ஓசை
தமிழ் ஓசை

எண்ணெய் நிறைந்த உணவுகளை உண்ட பின் தவறாமல் இதனை செய்யுங்கள்….

0 33

எண்ணெய்யில் பொரிக்கப்பட்ட, வறுக்கப்பட்ட உணவுகளை நிறைய பேர் விரும்பி சுவைப்பார்கள். அவை உடல் நலனுக்கு கேடுதரும் என்பதை அறிந்திருந்தாலும் அதன் ருசிக்கு அடிமையாகிவிடுவார்கள். எண்ணெய் கலந்த கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும். முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். எண்ணெய் வகை உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கமுடியாத பட்சத்தில் அதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு சில விஷயங்களை பின்பற்றுவது அவசியம். அவை குறித்து பார்ப்போம்.

* எண்ணெய் வகை உணவுகளை சாப்பிட்டு முடித்ததும் அவை விரைவாக ஜீரணமாகுவதற்கு தேவையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். நிறைய பேர் சாப்பிட்டு முடித்ததும் பால், டீ போன்றவற்றை சூடாக பருகுவார்கள். அதற்கு பதிலாக வெந்நீர் குடிப்பதே சிறந்தது. ஏனெனில் செரிமான அமைப்பை விரைவாக செயல்பட தூண்டுவதோடு உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதற்கு வெந்நீர் உதவும். மேலும் வெந்நீர் குடிப்பது சாப்பிடும் உணவில் உள்ள எண்ணெய் தன்மையை வெளியேற்றவும் உதவும்.

* வெறுமனே வெந்நீர் பருகாமல் அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து பருகலாம். அது உடலில் உள்ள எண்ணெய் மற்றும் கொழுப்பை விரைவாக அகற்ற துணைபுரியும். உடலில் உள்ள கொழுப்பை வெளியேற்றுவதால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்கவும் உதவும்.

* சாப்பிட்டு முடித்துவிட்டு வெந்நீர் பருகியதும் சிறிது தூரம் நடப்பதும் நல்லது. எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் வயிற்றை விரைவாக நிரப்பிவிடும். நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது வளர்ச்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கும். உடலும் விரைவாக உணவை ஜீரணிக்க வைப்பதற்கு இசைந்து கொடுக்கும். சிறிது தூரம் நடந்துவிட்டு வந்தால் உடல் இலகுவாகுவதை உணர்வீர்கள்.

* ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கு சாப்பிட்ட பிறகு நடைப் பயிற்சி மேற்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் வயிற்றில் இருந்து சிறு குடலுக்கு உணவை எடுத்து செல்லும் நேரத்தை விரைவுபடுத்தவும் நடைப்பயிற்சி உதவும்.

* எண்ணெய் நிறைந்த உணவுகளை சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிடுவது நல்லது. அது குடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும். உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காமல் எண்ணெய் மற்றும் கொழுப்பை விரைவாக ஜீரணிக்க வைக்கவும் உதவும்.

* மதிய வேளையில் எண்ணெய் உணவுகளை சாப்பிட்டால், சிறிது நேரம் கழித்து பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவது நல்லது. எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் ஏற்படுத்தும் வயிற்று தொந்தரவுகளைத் தடுப்பதற்கும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதில் நிறைந்திருக்கும்.

* எண்ணெய் நிறைந்த உணவுகளை சாப்பிட்ட பிறகு குளிர்ந்த உணவு பதார்த்தங்கள், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம்கள் என குளிர்ச்சியான எதையும் சாப்பிடக்கூடாது. ஏற்கனவே எண்ணெய் உணவுகள் ஜீரணமாவதற்கு குடல் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அந்த சமயத்தில் குளிர்ந்த உணவுகளை சாப்பிட்டால் ஜீரணமாவது மேலும் தாமதமாகும்.

* எண்ணெய் உணவுகளை சாப்பிட்டதும் தூங்கவோ, ஓய்வெடுக்கவோ கூடாது. அப்படி செய்தால் ஜீரணத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும். உணவு ஜீரணமான பிறகுதான் ஓய்வெடுக்கவேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.