Developed by - Tamilosai
இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களும் அழிவதை அன்று வேடிக்கை பார்த்துவிட்டு இன்று மனித உரிமைகள் பற்றிப்பேசுகின்ற இவர்களுக்கு எங்கிருந்து ஞானம் வந்தது. இவ்வாறானவர்களுடன் கலந்துரையாடுவது என்பது பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் ஆகிய உங்களுக்குப் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தவில்லையா? என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் ஆகியோருக்கு பகிரங்க மடல் ஒன்றை இன்று (05) அனுப்பி ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் தமிழ்க் கட்சிகளின் கலந்துரையாடலில் தாங்கள் இருவரும் கலந்து கொண்டு தெரிவித்த கருத்துக்களை வரவேற்கின்றேன்.
தமிழ் – முஸ்லிம் உறவுகள் ஒன்றிணைந்து பலமான அமைப்பாக உருவாக வேண்டும் என்ற தங்கள் இருவரின் கருத்துக்களும் காலத்தின் தேவை என்பதை தமிழர் விடுதலைக் கூட்டணி நன்கு உணர்ந்துள்ளது.
தங்களின் முயற்சி வெற்றி பெற வேண்டும் என நான் வாழ்த்துகிறேன்.
அதேவேளை தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவுகள் பற்றியும் சிறுபான்மை இனத்தவர்களின் பிரச்சனைகள் பற்றியும் இதற்கு தீர்வு வேண்டும் என முதன் முதலாக தமிழர் விடுதலைக் கூட்டணியே இந்தியா உட்பட சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச்சென்றது.
இருந்த போதும் இவ்வாறான பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு வேண்டும் என்று குறிப்பாக தாங்கள் இருவரும் மறந்தது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாகிய நாள் தொடங்கி பல்வேறு இன்னல்களையும் சந்தித்து பல தலைவர்களை துப்பாக்கி குண்டுகளுக்கும் தற்கொலை குண்டுதாரிகளுக்கும் பலி கொடுத்து இன்று வரை ஜனநாயக ரீதியில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கட்சி என்பது தங்களின் ஞாபகத்திற்கு வராதது எனக்கு வியப்பை தருகின்றது.
இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஜனநாயக விரோத செயல்களை தட்டிக் கேட்பதற்கு ஒரு ஜனநாயக அமைப்பால் மட்டுமே முடியும்.
ஆனால் தாங்கள் இருவரும் கலந்து கொண்ட கலந்துரையாடலில் ஏனையவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நீங்கள் ஒரு கனம் சிந்தித்து பார்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.