தமிழ் ஓசை
தமிழ் ஓசை

உலக அமைதி மிகுந்த ஆபத்தில் இருக்கும் சந்தர்ப்பத்தில் உலக அமைதி குறித்த கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள என்னை அழைத்ததற்கு நன்றி-ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ

0 315

உலக அமைதி என்பது வன்முறையற்ற உலகிற்கான அபிப்பிராயம் என உலக அமைதி மாநாடு 2022இல் (கொரிய தீபகற்பத்தின் அமைதிக்கான மாநாடு) நேற்று (12) உரையாற்றிய பிரதமரின் பாரியார் ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ தெரிவித்தார்.

உலகளாவிய அமைதி சம்மேளனத்தின் அழைப்பிற்கு ஏற்ப காணொளி தொழில்நுட்பம் ஊடாக தென்கொரியாவின் சியோலில் நடைபெறும் ´உலக அமைதி மாநாடு 2022´ இல் கலந்துகொண்டு பிரதமரின் பாரியார் இவ்வாறு வலியுறுத்தினார்.

மூன்று தினங்கள் நடைபெறும் இம்மாநாடு கடந்த 11ஆம் திகதி ஆரம்பமானதுடன், 150இற்கும் அதிகமான உலக நாடுகளை சேர்ந்த மதத் தலைவர்கள், இராஜதந்திரிகள், அமைதிக்கான ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆய்வாளர்கள் பலரும கலந்து கொண்டனர்.

மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமரின் பாரியார் ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ ஆற்றிய உரை,

“உலக அமைதி மிகுந்த ஆபத்தில் இருக்கும் சந்தர்ப்பத்தில் உலக அமைதி குறித்த கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள என்னை அழைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகளாவிய அமைதி சம்மேளனம் போன்ற அமைப்புகள் ஸ்தாபிக்கப்பட்டதன் விளைவாக, மனிதகுலம் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களுக்கும் எதிராக போராடி, எதிர்காலத்தில் நாம் எதிர்பார்க்கும் முழு அமைதியை அடைய முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

உலகளாவிய அமைதி சம்மேளனம் என்பது அனைவரும் சுதந்திரமாக வாழக்கூடிய அமைதியான உலகத்தை உருவாக்க அர்ப்பணித்த தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் உலகளாவிய வலையமைப்பாகும். சகிப்புத்தன்மையின் ஊடாக ஏற்படும் ஒத்துழைப்பு நெறிமுறைகளின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பதுடன் அது சுபீட்சத்திற்கு வழிவகுக்கிறது.

வௌ;வேறு மதங்களைச் சேர்ந்தவர்களிடையே பாகுபாடு இல்லாமையானது நேர்மையான நீதி மற்றும் உலகளாவிய அமைதிக்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய அணுகுமுறையை உருவாக்குகிறது.

உலக அமைதி என்பது வன்முறை இல்லாத உலகத்திற்கான அபிப்பிராயமாகும். அங்கு தேசங்கள் ஒன்றுக்கொன்று அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் பணியாற்ற முயல்கின்றன.

உலகளாவிய அமைதி சம்மேளனம் இதுவரை கொரிய தீபகற்பத்தில் அமைதியை மேம்படுத்த பல்வேறு வழிகளில் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மதம் மற்றும் கலாசாரத்தின் பங்கை மறுசீரமைத்தல் மற்றும் எதிர்கால தலைமுறை தலைவர்களின் வளர்ச்சி, அத்துடன் பெண் தலைமைத்துவத்தை ஆய்வுசெய்தல் மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவை உலக அமைதிக்கான மதிப்பைக் அதிகரித்துள்ளன.

உலக அமைதி என்பது வேறு வழியில் வெளிப்படுத்தப்படும் மகிழ்ச்சிக்கான கோட்பாடு மற்றும் அபிப்பிராயமாகும். அனைத்து தேசங்களும் இனங்களுக்கு இடையில் சுதந்திரம் மற்றும் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கும் மோதல்கள் மற்றும் போரைக் குறைப்பதற்கும் பங்களித்துள்ளது.

உலக அமைதியின் இருப்பு நாடுகளுக்கும் இனங்களுக்கும் இடையிலான உள்ளக மோதல்களையும் குறைக்கிறது.

பொருளாதார வளர்ச்சி மற்றும் மனித மேம்பாட்டிற்காக நாம் முன்னெடுக்கும் அமைதிப் பயணம், உலக அமைதி மற்றும் சமூக செழுமை ஆகியவற்றைக் கட்டியெழுப்புவதில் தெளிவாகப் பங்களித்துள்ளது.

சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்படாவிட்டாலோ அல்லது சரியாக நிலைநாட்டப்படாவிட்டாலோ பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கலாசார வளர்ச்சி சாத்தியமாகாது என்பது எனது நம்பிக்கை.

மேலும், அமைதியைக் கட்டியெழுப்பப் பயன்படுத்தப்படும் செயற்பாடுகளை உன்னிப்பாக அலசி ஆராய்ந்து நிலையான அமைதிக்கான பாதையை நன்கு திட்டமிட்டு சரியான விடாமுயற்சியுடன் அணுக வேண்டும். ஒற்றுமையாக முன்னேறிச் செல்லும் விருப்பத்துடன் சகோதர சகோதரிகளாக தோளோடு தோள் நின்று அமைதிக்கான முயற்சிகளைத் தொடர முடியும்.

கொரிய தீபகற்பத்தில் அமைதி என்பது அவர்களின் எல்லைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள அனைவரின் வாழ்க்கையையும் மாற்றும் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இந்த உலக மாநாடு 2022 மூலம், புதிய மற்றும் அமைதியான எதிர்காலத்திற்கான நமது அணுகுமுறையை மேலும் தீவிரப்படுத்த முடியும்.

´இங்குள்ள உங்கள் அனைவரதும் திறமைகளை மனித நேயத்திற்கும் அதன் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணிப்பீர்கள் என்று நம்புகிறேன்,” என்று பிரதமரின் பாரியார் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.