Developed by - Tamilosai
கொரோனாவின் ஒமிக்ரோன் திரிபு உலகின் முதன்மை பேசுபொருளாக தொடரும் நிலையில், இதுவரை உருவாகிய அனைத்து கொரோனா திரிபுகளையும் விட ஒமிக்ரோன் தான் முன்னெப்போதும் இல்லாத பெருவேகத்தில் உலகம் முழுவதும் பரவிவருவதாக உலக சுகாதார அமைப்பு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாத நடுப்பகுதியில் ஐரோப்பாவில் ஒமிக்ரோன் நாசகாரமான ஆக்கிரமிப்பைச் செய்யும் என நேற்றுக் காலை ஐரோப்பிய ஆணைக்குழுத்தலைவர் உர்சுலா வொண்டர் லேயன் எச்சரித்துள்ள பின்னணியில் உலக சுகாதார அமைப்பின் புதிய எச்சரிக்கை வந்துள்ளது.
உலகளாவிய அளவில் தற்போது 77 நாடுகளில் கொரோனா திரிபு பரவியுள்ளது.
ஒமிக்ரோன் டெல்டா திரிபைவிட விட குறைவான நோய்த்தாக்கங்களை ஏற்படுத்தினாலும், அதிக வேகத்தில்; அது பரவிவருவதால் பலநாடுகளில் மருத்துவமனைகள் உட்பட்ட சுகாதார கட்டமைப்புகள் நெருக்கடியில் சிக்கியுள்ளன.
இந்த நிலையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக தொடர்ந்தும் உலக அரங்கில் முன்னிலை பெற்றுள்ள அமெரிக்காவின் மொத்த கொரோனா மரணங்கள் நேற்று எட்டு இலட்சத்தை தாண்டியுள்ளன. இதில் இந்த ஆண்டில் மட்டும் 450,000 மரணங்கள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக கடந்த ஒக்டோபர் இரண்டாம் திகதியன்று 700,000 மரணங்கள் பதிவாக நிலையில், ஏறக்குறைய ஒன்றரை மாதங்களில் ஒரு லட்சம் மரணங்கள் அங்கு பதிவாகிய துன்பியல் பதிவு உருவாகியுள்ளது.
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 63,405 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன, இது கடந்த ஏப்ரலுக்கு பின்னரான புதிய பதிவாக உருவாகியுள்ளது .
ஜேர்மனியில் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் போதுமான தடுப்பூசிகள் கைவசம் இல்லாத நிலைமை ஒன்று உருவாகும் என்ற எச்சரிக்கை புதிய கூட்டணி அரசாங்கத்துக்கு சவாலை எழுப்பியுள்ளது.
எனினும் விரைவில் அதிக தடுப்பூசிகளை வாங்க முடியும் என புதிய சுகாதார அமைச்சர் கார்ல் லாட்டர்பாக் கூறியள்ளார்.