தமிழ் ஓசை
தமிழ் ஓசை

உரம், கிருமி நாசினிகளை மூன்று அமைச்சுக்கள் ஊடாக இறக்குமதி செய்ய அனுமதி

0 194

இறக்குமதி செய்யப்படும் உரம் அவசியம் என உறுதிப்படுத்தப்பட்ட பயிர்ச் செய்கைகளுக்குத் தேவையான உரம் மற்றும் கிருமி நாசினிகளை  மூன்று அமைச்சுக்கள் ஊடாக இறக்குமதி செய்ய விவசாயத்துறை அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய தேயிலை மற்றும் தெங்கு உட்பட  பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்குத் தேவையான உரத்தை பெற்றுக் கொள்வதற்கான அறிவுறுத்தல் மற்றும் அனுமதிப் பத்திரம் வழங்கும் பொறுப்பு பெருந்தோட்ட அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை சேவைக் கைத்தொழிலுக்கு அவசியமான  பூக்கள் உட்பட்ட அதனுடன் தொடர்புடைய பயிர்ச்செய்கைக்கு தேவையான அனுமதிப் பத்திரத்தை விநியோகிக்கும் அதிகாரம் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நீர்மூலமான பயிர்ச்செய்கை, வளியை அடிப்படையாகக் கொண்ட பயிர்ச்செய்கை ஆகியவற்றுக்குத் தேவையான உர இறக்குமதிக்கான அனுமதிப் பத்திரம் விவசாயத்துறை அமைச்சின் ஊடாக விநியோகிக்கப்படும்.

பெரும்போக விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான சிறந்த உரத்தை வழங்குமாறு கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் நாடு தழுவிய ரீதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேதனப் பசளையையும், அரசாங்கம் தற்போது வழங்கும் நனோ நைட்ரஜன் கிருமி நாசினியையும் பயன்படுத்தும் முறைமை தமக்குத் தெரியாது. ஆகவே இரசாயன உரத்தை தமக்குப் பெற்றுத்தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரும்போகத்திற்குத் தேவையான சேதனப் பசளை உரம் மற்றும் நனோ நைட்ரஜன் கிருமி நாசினிகள் நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து  விவசாயத் திணைக்களங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

ஆகவே விவசாயிகள் பெரும்போக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியமாகும்   என விவசாயத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.