தமிழ் ஓசை
தமிழ் ஓசை

உயிரிழந்த பிரியந்த குமாரவின் சகோதரர் காணொளிகளை பகிர்வதை நிறுத்துமாறு கோரிக்கை

0 146

பாகிஸ்தானில் இலங்கையரான பிரியந்த படுகொலை செய்யப்பட்ட போது பதிவு செய்யப்பட்ட காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

இந்நிலையில், உயிரிழந்த பிரியந்த குமாரவின் சகோதரர் தனது பேஸ்புக் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு, தனது சகோதரர் கொல்லப்பட்ட காட்சிகள் அடங்கிய காணொளிகளை பகிர்வதை நிறுத்துமாறு ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தள பயனர்களிடம் கோரியுள்ளார்.

மேலும், தனது சகோதரரின் கொலை தொடர்பான காணொளிகள் சமூகவலைத்தளங்களில் பரவி வருவது தனது குடும்பத்திற்கும், குறிப்பாக பிரியந்தவின் மனைவிக்கும், அவரது இரு பிள்ளைகளுக்கும் பாதிப்பையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக, ஏற்கனவே பகிரப்பட்டு வரும் காணொளிகளை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்குமாறு சமூகவலைத்தளங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் சியல்கோட்டில் கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய அவரது தலை முதல் கால் வரையிலான உடற்பாகங்கள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உடலின் உட்பாகங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பிரியந்த குமார தியவடனவின் சடலம் இன்று இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

அத்துடன் இந்த கொலை சம்பவம் தொடர்பில் இதுவரையில் 235 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பிரியந்த குமார தியவடன பணியாற்றிய தொழிற்சாலையின் 900 பணியாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அந்த தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதோடு அங்குள்ள பணியாளர்கள் தப்பி சென்றுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன

சியல்கொட் நகரில் கொல்லப்பட்ட இலங்கையரின் குடும்பத்துக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாகிஸ்தானின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஃபவாட் செளத்ரி தெரிவித்துள்ளார். 

Leave A Reply

Your email address will not be published.