Developed by - Tamilosai
நாட்டில் இடம்பெறும் பொது போராட்டங்கள் மீதான அடக்குமுறைகள், ஊடகவியலாளர்கள், குடிசார் செயற்பாட்டாளர்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களுக்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவே பொறுப்புக்கூற வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் சுனில் ஹந்துநெதி (Sunil Handunnetti), ஜனநாயக உரிமைகளுக்காக போராடுவதற்கும், புரட்சி செய்வதற்குமான மக்களின் உரிமைமைய இல்லாது செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “எமது கூட்டங்களுக்கு வந்து முட்டைகளை வீசித் தாக்கினார்கள். பின்னர் ஊடகவியலாளர் சமுதிதவின் வீட்டிற்கு சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர். அடுத்ததாக நாளை யாரை தாக்கப் போகின்றார்கள்?
இந்த நிலைதான் வரலாற்றில் லசந்த விக்கரமதுங்கவுக்கும் நடந்தது. உபாலி தென்னகோனுக்கு நடந்ததும் இதுவே தான். பூதல ஜயந்தவிற்கு நடந்ததும் இதுவே தான். இன்னும் பின்னால் சென்றால் ரிச்சர்ட் சொய்சாவுக்கு நடந்ததும் இதுவே தான்.
மக்கள் மத்தியில் இந்த அரசாங்கத்தின் பலம் குறைந்துவரும் போது, ஜனநாயக உரிமைகளுக்காக பேசுவதற்கு, புரட்சி செய்வதற்கு வாய் திறக்கும் ஊடகவியலாளர்களின், சிவில் செயற்பாட்டாளர்களின், மக்களின் வாய்களை அடக்க முயற்சிக்கிறார்கள்.
தற்போது குடிசார் செயற்பாட்டாளர் ஒருவரை கைது செய்துள்ளார்கள். அடுத்ததாக சமுதித்தவின் வீட்டிற்கு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் நோக்கம் என்ன? இதையா நாம் ஒரே நாடு ஒரே சட்டம் என்கின்றோம்.
அவர்களுக்கு வேண்டுமானவற்றை எல்லாம் சொல்ல முடியும். அவர்களுக்கு வேண்டாதபோது தாக்குதல் நடத்துவதா பதில். இதற்கு வேறு நபர்களை குற்றம் சாட்டி பயனில்லை.
கோட்டாபய ராஜபக்ச அவர்களே! உங்களை நம்பிய மக்களுக்கு நீங்களே தான் பதில் கூறவேண்டும். வேறு வேறு காரணங்களை கூறி வேறுவிதமான புதிய கதைகளை உருவாக்க வேண்டாம்” என்றார்.