Developed by - Tamilosai
உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்-ரஷ்யா அறிவிப்பு

உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் திடீர் தாக்குதல் நடத்தி உலக நாடுகளுக்கு ரஷ்யா அதிர்ச்சி கொடுத்துள்ளது. நேற்றிலிருந்து ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீதான தாக்குதலை தொடங்கியிருக்கிறது. போர் என்று கூறும் அளவுக்கு மிகப்பெரிய அளவிலான தாக்குதல்கள் இன்னும் தொடுக்கப்படவில்லை. உக்ரைனில் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் இருப்பதால் உலக நாடுகள், இந்த விவகாரத்தை கவனமாக கையாண்டு வருகின்றன.
அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்டவைகளை உறுப்பு நாடாக கொண்டுள்ள நேட்டோ அமைப்புடன் உக்ரைன் சேர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. இதனால், ரஷ்யாவை எதிர்த்து நேட்டோ நாடுகள் தாக்குதல் நடத்துமா என்ற கேள்வி சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பெரிய நகரங்களில் வெடிச்சத்தங்களும் துப்பாக்கிச் சூடு சத்தமும் அலற சுமார் 1 லட்சம் பேர் வீடு வாசலை விட்டு வெளியேறி விட்டனர்.
சுமார் 22 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் உக்ரைனில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் அனைவரும் தலைநகர் கீவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தற்போது விமானப் போக்குவரத்து முடக்கப்பட்டிருப்பதால் விமானப்படை விமானங்களை பயன்படுத்தி மீட்பு பணியை மேற்கொள்ளலாமா என்ற ஆலோசனையில் இந்திய மத்திய அரசு உள்ளது.
இதனிடையே, ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குள் ஊடுருவியதை அடுத்து தலைநகர் கீவுக்குள்ளும் படைகள் நுழையும் நிலையில் உள்ளன. இதனையடுத்து செய்வதறியாது கையைப் பிசையும் உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி உலக நாடுகள் உடனடியாக ஏதாவது செய்யுங்கள் என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தலைநகர் கீவின் மேல் வான் தாக்குதல் சைரன்கள் அலறியவண்ணம் இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்திகள் கூறுகின்றன. அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி ரஷ்ய விமானம் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டு கட்டிடம் ஒன்றினுள் புகுந்ததாக கூறப்படுகிறது. தலைநகரின் சுற்றுப்புறப்பகுதியில் ரஷ்யப் படைகள் ஊடுருவியுள்ளன, அடுத்து தலைநகருக்குள்ளும் ஊடுருவும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
பெரிய நகரங்களில் வெடிச்சத்தங்களும் துப்பாக்கிச் சூடு சத்தமும் அலற சுமார் 1 லட்சம் பேர் வீடு வாசலை விட்டு வெளியேறி விட்டனர். 12 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. செர்னோபில் அணு நிலையத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றிவிட்டன.
அமெரிக்காவின் கைப்பாவையாக இருப்பதாக புதின் கருதும் உக்ரைனைக் கைப்பற்றி அரசாங்கத்தை கவிழ்ப்பதை ரஷ்யா நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமெரிக்க மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில், உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்