தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இவ்வருடத்துக்குள் புதிய அரசமைப்பை இயற்றுவதற்கு அரசு தீவிரமாக செயற்படும்.-ஜி.எல். பீரிஸ்

0 211

” 1978 இல் இயற்றப்பட்ட அரசமைப்பே நாட்டில் தற்போது அமுலில் உள்ளது. அன்று முதல் இற்றைவரை சமூகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எனவே, நாட்டுக்கு பொருத்தமான புதிய அரசமைப்பொன்று இயற்றப்படும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார். அந்த விடயத்துக்கு இவ்வாண்டில் முன்னுரிமை – முக்கியத்துவம் வழங்கப்படும்.

புதிய அரசமைப்புக்கான ஆரம்பக்கட்ட வரைவு நகலை தயாரிப்பதற்காக நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்பட்டது. அந்த நிபுணர்கள் குழுவின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இரு மாதத்துக்குள் அது தொடர்பான ஆவணம் அரசிடம் கையளிக்கப்படும். நிபுணர்கள் குழுவால் இவ்வாறு வழங்கப்படும் நகலே, இறுதிப்படுத்தப்பட்ட அரசமைப்பென சில கருதுகின்றனர். உண்மை அதுவல்ல.

நிபுணர்கள் குழுவால் புதிய அரசமைப்புக்கான ஆரம்பக்கட்ட வரைவு நகல் முன்வைக்கப்படும். நாடாளுமன்ற குழுவின் ஊடாக அதில் உள்ள ஓவ்வொரு விடயங்களும் விரிவாக ஆராயப்படும். உரிய வகையில் கவனம் செலுத்தப்படும். அதன் பின்னரே நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும். யோசனைகள் உள்வாங்கப்படும்.

புதிய அரசமைப்பு வெற்றியளிக்க வேண்டுமானால் அதற்கு அனைத்து கட்சிகளினதும் ஆதரவு முக்கியம். இது விடயத்தில் கட்சிகளின் நேரடி பங்களிப்பும், பொது இணக்கப்பாடும் அவசியம். அப்போதுதான் அரசமைப்பு நீடித்து நிலைக்கும்.

இவ்வருடத்துக்குள் புதிய அரசமைப்பை இயற்றுவதற்கு அரசு தீவிரமாக முயற்சிக்கும். அந்த பணிக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் வழங்கப்படும். ”

இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு, புதிய அரசமைப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

Leave A Reply

Your email address will not be published.