தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இழப்பீட்டில் பங்கு வேண்டுமென இந்தியாவிடம் யாழ். மீனவர்கள் கோரிக்கை

0 228

உங்கள் அரசியலை குப்பையில் போடுங்கள். சட்டத்தை நடைமுறைப்படுத்தி விட்டு இங்கு வந்து பேசுங்கள். அத்துமீறி மீன் பிடிப்பது தொடர்பாக இரண்டு சட்டங்கள் காணப்படுகின்றன. அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டுமென யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

எங்கள் உயிர் போனாலும் சரி தமிழ்நாட்டு மீனவர்கள் உயிர் போனாலும் சரி எல்லாமே ஒன்று தான். இந்திய மீனவரின் உயிரிழப்புக்கு ஒரு கோடி ரூபா இழப்பீடு கோரப்படுகிறது.

இந்திய இழுவைப்படகுகளால் நாங்கள் பல கோடிகளை இழந்திருக்கிறோம். உங்கள் இழப்பீட்டை கழித்துக் கொண்டு மீதியை எமக்குத் தாருங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:

இந்திய மீனவர்களின் படகை இலங்கைக் கடற்படையின் படகு மோதியதில் உயிரிழந்தவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம். அது ஒரு புறமிருக்க எமது கடற்பரப்பிற்குள் மீண்டும் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல் ஆரம்பித்துள்ளது.

எங்கள் கடற்பரப்புக்குள் வரவேண்டாம் என்று சொல்லியும் கேட்கின்றார்களில்லை. பருத்தித்துறையின் முனை கடற்பரப்புக்குள் மீண்டும் இந்திய இழுவைப் படகுகள் வந்து சேதங்களை விளைவித்துள்ளன.

கடற்படை இழுவைப் படகுகளை தடுத்து அத்துமீறுபவர்களை கைது செய்ய வேண்டும். அத்துமீறும் படகுகளை அரசுடமையாக்கி அதன் மூலம் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான நிவாரணங்களை வழங்க வேண்டும்.

காலங்காலமாக இந்திய இழுவைப்படகுகளால் நாம் கோடிக்கணக்கான உபகரணங்களை இழந்துள்ளோம்.

எங்கள் கடற்பரப்புக்குள் அத்துமீறி வருபவர்களை ஏன் இந்திய அரசாங்கம் பார்த்துக்கொண்டு இருக்கிறது என்று எமக்குப் புரியவில்லை. உங்கள் கடல் வளங்கள் முழுவதையும் அழித்து விட்டீர்கள். 


மனசாட்சி இல்லாமல் எங்களுடைய வளங்களையும் அழிக்க முற்படுகின்றார்கள். எங்கள் வளம் முற்றாக அழிக்கப்பட்டால் நாம் கேவலமான நிலைக்குத் தள்ளப்படுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.