Developed by - Tamilosai
பொறியியலாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டத்தினால் இலங்கை மின்சார சபையின் தலைமை காரியாலயத்தில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இருவரை கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கு அதன் தலைவர் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யுகதனவி மின்னிலையத்தின் அரசாங்கத்துக்கு உரித்தான 40 சதவீத பங்குகளை, அமெரிக்க நிவ் போட்டர்ஸ் (New Fortress) நிறுவனத்திற்கு வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்ட மின்சார சபை அதிகாரிகள் இருவர், கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
பரிமாற்றப் பிரிவின் பொதுமுகாமையாளரும், மற்றுமொரு அதிகாரி ஒருவரும், மின்சார சபைத் தலைவரினால் நேற்று முதல் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று மின்சார சபையின் தலைமையகத்திற்கு பிரவேசித்தனர்.
பின்னர், அவர்கள் இந்த விடயம் தொடர்பில் மின்சார சபையின் பொது முகாமையாளரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதன்போது இணக்கமற்ற நிலை ஏற்றபட்டதுடன், பொறியியலாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், பொதுமுகாமையாளர் இருந்த அறையை சுற்றி வளைத்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டதாக தெரியவருகின்றது.