Developed by - Tamilosai
இலங்கையிலுள்ள சிறார்களுக்கு அதிகரிக்கும் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக எதிர்வரும் 07 மாதங்களுக்குள் UNICEF சர்வதேச சமூகத்தினரிடம் 25.3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை கோரியுள்ளது.
இலங்கையில் கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய1.7 மில்லியன் சிறார்களின் வாழ்க்கையை பாதுகாப்பதற்காகவும் போசாக்கு, சுகாதாரம், சுத்தமான குடிநீர், கல்வி மற்றும் உளநல மேம்பாடு ஆகியவற்றுக்காகவும் இந்த நிதி கோரப்பட்டுள்ளதாக UNICEF நிறுவனம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 04 மாதங்களுக்குள் பாரிய அனர்த்த நிலையை எதிர்நோக்கக்கூடிய இலங்கை மக்களின் அவசர தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபை ஏற்கனவே வேண்டுகோளை முன்வைத்துள்ளது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையால் , நாட்டில் உள்ள அரைவாசிக்கும் மேற்பட்ட சிறார்களுக்கு ஏதேனுமொரு வகையில் மனிதாபிமான உதவி தேவைப்படுவதாகவும் UNICEF அமைப்பு கூறியுள்ளது.
தற்போதைய நெருக்கடியால் குடும்பங்கள் தங்களை வரையரை செய்துகொண்டுள்ளதாக UNICEFஅமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி Christian Skoog தெரிவித்துள்ளார்.
சிறார்கள் துன்பப்படுவதாகவும், பசியுடன் உறங்கச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அநேகமான சிறார்கள் தினமும் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிறார்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் அடங்கலாக வைத்தியசாலைகளிலுள்ள நோயாளர்களுக்கான மருத்துப்பொருட்கள் சடுதியாக குறைவடைந்து செல்வதாகவும் Christian Skoog தெரிவித்துள்ளார்.
நெருக்கடி நிலைக்கு முன்பிருந்தே, தெற்காசியாவில் மந்தபோசனைக்குள்ளான சிறார்கள் காணப்படும் இரண்டாவது நாடாக இலங்கை பதிவாகியுள்ளதுடன், 05 சிறார்களில் இருவருக்கு மூன்று வேளைகளும் உரிய வகையில் உணவு கிடைப்பதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.