Developed by - Tamilosai
நாட்டில் பெய்து வரும் மழையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் டெங்கு காய்ச்சல் பரவும் வேகம் தீவிரமடைந்து தொற்று நோயாக மாறும் அபாயம் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் பாரிய தொற்றுநோயாக பரவுவதற்கான ஆபத்துக்கள் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு ஏற்பட்டால், மருத்துவமனைகளில் மருந்து மற்றும் உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, நாடு பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த அபாயத்தை உணர்ந்து, குறைந்தபட்சம் தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்யும் பொறுப்பை ஒரு தீவிர தேசியப் பொறுப்பாக கருதுமாறு சுகாதாரத் துறை மக்களை வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஐந்து மாதங்களில் 26060 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், கிட்டத்தட்ட 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அண்மையில் புறக்கோட்டை பிரதேசத்தில் 9 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.