Developed by - Tamilosai
பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் மரணம் அடிப்படைவாதத்திற்கு எதிரானது. இதனால், இதற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறான அடிப்படைவாதங்கள் குறித்து மதத் தலைவர்கள் அவதானம் செலுத்த வேண்டுமெனவும், இலங்கையில் அடிப்படைவாதம் தலைத்தூக்க இடளமளிக்க முடியாது எனவும் அவர் நேற்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், பிரியந்தவின் கொலை அடிப்படைவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென்ற விடயத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. விசேடமாக இவ்வாறான அடிப்படைவாதங்கள் குறித்து மத தலைவர்கள் அவதானம் செலுத்த வேண்டும். இந்த அடிப்படைவாதத்தை புரிந்துகொள்ள வேண்டும்.
பாகிஸ்தானிய அரசு இதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் உச்ச தண்டனையை வழங்க வேண்டும். பாகிஸ்தானில் உள்ள அனைத்து இலங்கையர்களதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறில்லை எனில் அந்நாட்டிலுள்ள அனைத்து இலங்கையர்களும் நாட்டுக்கு அழைத்து வரப்பட வேண்டும்.
இவ்வாறான கொடூர கொலைக்கு இலங்கையர் உள்ளாவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மத அடிப்படைவாதிகள் 2019ஆம் ஆண்டு இலங்கையில் இவ்வாறான ஒரு தாக்குதலை நடத்தியுள்ளனர். இலங்கையில் மீண்டும் அடிப்படைவாதம் ஒன்று தலைத்தூக்க எத்தனிப்பதை அவதானிக்க முடிகிறது. இது தொடர்பில் மதத் தலைவர்கள் தமது குரல்களை வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.