Developed by - Tamilosai
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சவூதி அரேபியாவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லா அல் சௌத் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.
தற்போதைய உலகளாவிய சூழலில், பரஸ்பர நலனுக்காக இருதரப்பு ஆர்வமுள்ள பல துறைகளில் வலுவான உறவுக்கு இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.
கொழும்புத் துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், ஹம்பாந்தோட்டையில் பிரத்தியேகமான மருந்து வலயங்கள், புதிதாக அடையாளம் காணப்பட்ட சர்வதேச தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், மட்டக்களப்பில் துணி / ஆடை வலயம் ஆகியவற்றில் சவூதி அரேபியாவின் முதலீடுகளை ஊக்குவித்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், சவூதி அரேபிய தொழில் சந்தையில் இலங்கையர்களுக்கான அதிகமான வேலை வாய்ப்புக்களை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
அபிவிருத்தி ஒத்துழைப்பு என்பது இருதரப்பு பங்காளித்துவத்தின் முக்கிய அங்கம் எனக் குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், இலங்கைக்கு உட்கட்டமைப்பு அபிவிருத்தி உதவிகளை வழங்கியமைக்காக சவுதி அரேபியாவிற்கு இலங்கையின் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே நிலவுகின்ற உற்சாகமான இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்கான சவூதி அரேபிய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும், பொருளாதார ஒத்துழைப்பையும் சவூதி அரேபிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியனார்.