Developed by - Tamilosai
இறுதிப் போரில் பிரபாகரன் சரணடையவில்லை, அவரை இராணுவத்தினர் உயிருடன் பிடிக்கவும் இல்லை, இறுதிப் போர்க் களத்தில் அவர் இறுதி வரைப் போராடியே உயிரிழந்தார்
“இறுதிப் போரில் பிரபாகரன் சரணடையவில்லை. அவரை இராணுவத்தினர் உயிருடன் பிடிக்கவும் இல்லை. இறுதிப் போர்க் களத்தில் அவர் இறுதி வரைப் போராடியே உயிரிழந்தார்.”
- இவ்வாறு முன்னாள் இராணுவத்தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பின்னரே உயிரிழந்தார் என்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்துத் தொடர்பில் இறுதிப் போரில் இராணுவத் தளபதியாகப் பதவி வகித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு பதிலளித்தார்.
“பிரபாகரனின் மரணத்தை வைத்து அன்று தொடக்கம் இன்று வரை சிலர் அரசியல் செய்து வருகின்றனர்.
இராணுவத்தினருடனான நேரடி மோதலிலேயே பிரபாகரன் உயிரிழந்தார் என்பது உண்மை. அவரின் வெற்றுடலையே இராணுவத்தினர் மீட்டனர்.
பிரபாகரனை உயிருடன் பிடிக்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் விரும்பின.
அந்த நாடுகள் இலங்கை அரசுக்கு அன்று அழுத்தமும் கொடுத்திருந்தன. எனினும், பிரபாகரன் எந்தத் தரப்பிடமும் சிக்காமல் இறுதி வரைப் போராடியே உயிரிழந்தார் ” – என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.