தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இறுதிப்போரில் முக்கிய பங்காற்றிய ஓய்வு பெற்ற இராணுவ தளபதி எச்சரிக்கை

0 251

இலங்கை தொடர்பில் ஜெனிவா விவகாரம் தீவிரமானது எனவும் நாடு பெரும் ஆபத்தில் உள்ளதாகவும்  இறுதிப்போரில் முக்கிய பங்காற்றிய சிறிலங்கா இராணுவத்தின் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சாகி கல்லகே (Major General Chagi Gallage) எச்சரிக்கை விடுத்துள்ளார்.. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் பயங்கரவாதிகளைத் தோற்கடித்து 30 வருட இனப் போரை வென்றது போன்று, எமக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்களை நாம் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். 

ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கைக்கு எதிராக பல வருடங்களாக போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றது. போர் முடிவடைந்து பதின்மூன்று வருடங்கள். எனினும், இவ்வாறான குற்றச்சாட்டுக்களை இலங்கை சரியாக கையாளவில்லை. இந்த குற்றச்சாட்டுகளை நாம் போரில் எதிர்கொண்டது போல் ஆக்ரோஷமாக எதிர்கொள்ள வேண்டும்.

இவ்வாறான போர்க் குற்றச் சாட்டுக்களை உரிய முறையில் நிராகரிக்காவிடின் எதிர்காலத்தில் நாட்டுக்கு ஆபத்தான நிலை உருவாகலாம். யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் வெளி சக்திகள் எமது நாட்டுக்கு அச்சுறுத்தலாகவே இருக்கின்றன. நாட்டில் அரசியல் அதிகாரம் செலுத்தும் தலைவர்கள் இந்த நிலையை புரிந்து கொள்ள வேண்டும்.

நாடாளுமன்றத்திலுள்ள சில கட்சிகள் போர்க்குற்றச்சாட்டுகளில் வெளிநாட்டின் தலையீட்டை கோருகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். ஜெனிவா மனித உரிமைகள் அமைப்பினால் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தை எதிர்க்காததற்கு இந்த நாடு எதிர்காலத்தில் பாரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

இம்முறை ஜெனிவா மனித உரிமைகள் அமர்வுகள் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளது. கடந்த ஆண்டுகளிலும் இந்த போர்க்குற்ற குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை அரசு பதிலளிக்கவில்லை. ஆனால் இம்முறை உரிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த சூழ்நிலையை நாங்கள் புறக்கணிக்க முடியாது.

போருக்குப் பின்னரான தேசிய நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பிலான பல்வேறு அறிக்கைகளுக்கு மாறாக இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஓய்வுபெற்ற மற்றும் பணியில் இருக்கும் இராணுவ வீரர்கள் மீது எந்தவிதமான நடைமுறையும் இன்றி, செவிவழிச் சான்றுகளின் அடிப்படையில் மட்டும் கொடூரமான நடவடிக்கை ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் சரியான வழிமுறையை நடைமுறைப்படுத்துவதில் தற்போதைய அரசியல் தலைமை பாராமுகமாக இருப்பதாகவே தெரிகிறது. இந்த நிலையை போக்க அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.