தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இறந்தவர்களுக்காக இழப்பீடு கொடுத்து நடந்த இழப்பை ஈடு செய்ய முடியாது – டளஸ் அழகப்பெரும

0 372

கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் பாலம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இங்கு துரிதமாக பாலம் அமைத்துக் கொடுப்பதே அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களுக்கு செய்யும் மிகப் பெரிய நியாயம் எனவும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இறந்தவர்களுக்காக இழப்பீடு கொடுத்து நடந்த இழப்பை ஈடு செய்ய முடியாது என்று குறிப்பிட்ட அவர் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு ஆபத்தான 1,000 பாலங்கள் நாடளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இங்கு பாலம் அமைக்க இரு தடவை அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா இங்கு சென்று அடிக்கல் நாட்டி பூர்வாங்க செயற்பாடுகள் இடம்பெறும் நிலையிலே இந்த அனர்த்தம் நடந்துள்ளது.

தற்காலிகமான 3.5 கிலோ மீட்டர் நீள பாதையொன்றும் இங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்தது. கிண்ணியா நகர சபையும் பிரதேச சபையும் இங்கு படகுப்பாலம் அமைக்க அனுமதி கோரியிருந்தன. ஆனால் அதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. அது நிராகரிக்கப்பட்டு தற்காலிக வீதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அனுமதி இன்றியே இந்த படகுப் பாலம் செயற்படுத்தப்பட்டுள்ளது. சட்டத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் அது தொடர்பில் செயற்படுவர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயும் இரு குழுந்தைகளும் இறந்துள்ளன. இது நஷ்ஈடு வழங்கி ஈடு செய்ய முடியாத இழப்பாகும். வாழும் அவர்களின் குடும்பங்களுக்காக நஷ்டஈடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். இதற்கு முன்னர் கிண்ணியாவுக்குச் செல்ல பாலம் இருக்கவில்லை. படகுப் பாலம் தான் இருந்தது.போக்குவரத்து அமைச்சராக பணியாற்றிய போது அங்கு ஆபத்தான படகுப் பாலத்தில் சென்றிருக்கிறோன். மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த போது இங்கு பாலம் அமைக்க நடவடிக்கை எடுத்தார்.

விபத்து நடந்த இடத்தில் பாலம் அமைக்கும் பணி தாமதமாகியுள்ளது. தற்பொழுது அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு துரிதமாக பாலம் அமைத்துக் கொடுப்பதே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்தவர்களின் குடும்பத்தினருக்கு செய்யும் உச்ச பட்ச நியாயமாக இருக்கும் . அது எமது அரசாங்கத்தின் முழுமையான பொறுப்பாக கருதுகிறோம்.

இவ்வாறு ஆபத்தான ஆயிரம் பாலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்று கருதவில்லை. ஆனால் முன்னுரிமை வழங்க வேண்டிய பாலங்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டு நிர்மாணிக்கப்படுகின்றன என்றார்.

இதேவேளை திருகோணமலை – குறிஞ்சாக்கேணி பகுதியில் இன்று (25) முதல் படகு சேவையினை முன்னெடுக்கவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.