Developed by - Tamilosai
அத்தியாவசிய பொருட்களின் விலையை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக கட்டுப்படுத்த முடியாது.பல்வேறு காரணிகளினால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் இரு வார காலத்திற்குள் அப்பிரச்சினைக்கு சிறந்த தீர்வு முன்வைக்கப்படும்.
நுகர்வோரை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என கூட்டுறவுச் சேவைகள்,சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன குறிப்பிட்டுள்ளார்
பேலியகொட மெனிங் மொத்த விற்பனை நிலையத்தில் நேற்றைய தினம் கரட் ஒரு கிலோகிராம் 300 ரூபாவிற்கும்,லீக்ஸ் ஒருகிலோகிராம் 300 ரூபாவிற்கும்,பச்சை மிளகாய் ஒருகிலோகிராம் 200 ரூபாவிற்கும், கறிமிளகாய் ஒருகிலோகிராம் 400 தொடக்கம் 450 ரூபாவிற்கும்,போஞ்சி ஒருகிலோகிராம் 300 ரூபா தொடக்கம் 350 ரூபா வரையிலும்,தக்காளி ஒருகிலோகிராம் 300 ரூபா தொடக்கம் 320 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கடந்த காலங்களை காட்டிலும் தற்போது மரகறிகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன. உர பிரச்சினை காரணமாக மரக்கறி உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளன.
எதிர்வரும் நாட்களிலும் விலை அதிகரிக்கக் கூடும். இவ்வாறான நிலை தொடர்ந்தால் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என மெனிங் பொது விற்பனை நிலையத்தின் பிரதான ஒருங்கிணைப்பாளர் அனில் இந்ரஜித் குறிப்பிட்டுள்ளார்.
மரக்கறிகளை அதிக விலை கொடுத்து மொத்தமாக பெற்று அதனை இலாபமான முறையில் நுகர்வோருக்கு வழங்க முடியாது ஆகவே மொத்த விலைக்கு அமைவாகவே மரக்கறிகளின் விற்பனை விலையை தீர்மானிக்க முடியும் என மரக்கறி சில்லறை வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.
சமையல் எரிவாயு மற்றும் மரக்கறி ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் உணவக உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க ஹோட்டல் மற்றும் சிற்றுண்டி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதற்கமைய கொத்துரொட்டி 20 ரூபா தொடக்கம் 25 ரூபாவிலும்,ஏனைய பனிஸ் வகையிலான உணவு பொருட்களின் விலை 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.