தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இராணுவம் வசமுள்ள வலி. வடக்கு காணிகள் விடுவிக்கப்படும் – டக்ளஸ்

0 105

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவற்றை விடுவிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

உள்ளூரில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வசிக்கும் காணிகளற்ற குடும்பங்களுக்கு அரச நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட காணிகளுக்கான உறுதிகளை வழங்கும் நிகழ்வு யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

வலி. வடக்கில் மக்களுடைய சுமார் 3 ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ள நிலையில் அது தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியுடன் பேசினேன். 

அவர் படிப்படியாக விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாது நிரந்தர நியமனம் கிடைக்காத வடக்கு சுகாதார தொண்டர்களின் நிரந்தர நியமனம் தொடர்பிலும் ஜனாதிபதியுடன் பேசினேன்.

சுகாதார தொண்டர்களின் நிரந்தர நியமனத்திற்கு தெரிவில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

எனவே பாரபட்சமற்ற முறையில் வெளிப்படைத் தன்மையுடன் மீண்டும் நேர்முகத் தேர்வுகளை நடத்தி நிரந்தர நியமனங்களை வழங்குவது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடினேன். அவர் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இவ்வாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஒத்துழைப்புடன் மக்களுக்குத் தேவையான அனைத்துச் செயற்பாடுகளையும் முன்னெடுக்கத் தயாராக இருக்கின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.