தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இராணுவமயமாக்கல் தொடர்பில் ஐ.நா விசேட அறிக்கையாளர் விசனம்

0 176

இலங்கையில் உரிமைகளை வென்றெடுப்பதற்காகப் போராட்டங்களில் ஈடுபடுகின்ற மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுவதுடன் அச்சுறுத்தப்படுகின்றார்கள். அதுமாத்திரமன்றி ஒன்றுகூடுவதற்கான உரிமையை மட்டுப்படுத்துவதற்கு கொவிட் – 19 சுகாதாரப்பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. 

இவை இலங்கையில் சிவில் சமூக செயற்பாடுகளுக்கான இடைவெளி சுருங்கியிருப்பதை வெளிப்படுத்துகின்றன என்று அடிமைத்துவத்தின் சமகால வடிவங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரொமோயா ஒபொகாடா தெரிவித்துள்ளார்.

மேலும் நுண்கடன்களால் கடந்த சில வருடங்களில் மாத்திரம் 200 இற்கும் அதிகமான பெண்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பதாகவும் கடனை மீளச்செலுத்தமுடியாத பெண்களிடம் நுண்கடன் வழங்கல் நிறுவனங்களின் முகவர்கள் பாலியல் இலஞ்சம் கோருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்தோடு பெருந்தோட்டங்களில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானோர் 50 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருப்பதுடன் அவர்களுக்கான ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பன உரிய காலத்தில் வழங்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்த அடிமைத்துவத்தின் சமகால வடிவங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரொமோயா ஒபொகாடா அரசாங்கத்தின் பிரதிநிதிகள், தொழிற்சங்கப்பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பெருந்தோட்டத்தொழிலாளர்கள், சுதந்திர வர்த்தக வலயப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்து நாட்டின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுத்ததுடன் மதிப்பீடுகளையும் மேற்கொண்டார்.

இலங்கையில் அவரது மதிப்பீட்டுப்பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்த அவர், நாட்டில் கடந்த ஒருவாரகாலத்தில் அவரது அவதானிப்புக்கள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அச்சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது,

இலங்கையில் கடந்த ஒருவாரகாலத்தில் வெளிவிவகார அமைச்சர், தொழில் அமைச்சர், சட்டமா அதிபர், தொழிற்சங்கப்பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெருந்தோட்டத்தொழிலாளர்கள் உள்ளடங்கலாக சுமார் நூற்றுக்கும் அதிகமான தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை மேற்கொண்டேன். அதுமாத்திரமன்றி சுதந்திர வர்த்தக வலயங்களுக்கும் கண்டி மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு அங்கு பணிபுரியும் தொழிலாளர்களைச் சந்தித்துப்பேசினேன்.

அதன்படி நிறைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ளும் நோக்கிலான கூட்டிணைவில் இலங்கை இணைந்துகொண்டமை மற்றும் சிறுவர்களைத் தொழிலில் ஈடுபடுத்தல், வலுகட்டாயமாகத் தொழில்களில் ஈடுபடுத்தல் ஆகியவற்றை முடிவிற்குக்கொண்டுவருவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவையாகும். 

குறிப்பாக சிறுவர்கள் பணிக்கமர்த்தப்படுவதை முடிவிற்குக்கொண்டுவரும் நோக்கில் கடந்த 2013 ஆம் ஆண்டில் இரத்தினபுரி மாவட்டத்தில் ‘சிறுவர் தொழிலாளர் இல்லாத வலயம்’ நிறுவப்பட்டமை முக்கியமானதாகும். அதேபோன்று கடந்த ஜனவரி மாதம் சிறுவர்களைப் பணிக்கமர்த்துவதற்கான குறைந்தபட்ச வயதெல்லை 14 இலிருந்து 16 ஆக உயர்த்தப்பட்டது. 

மேலும் ஆட்கடத்தல் உள்ளடங்கலாக பல்வேறு குற்றச்செயல்களை முடிவுறுத்துவதற்கு அவசியமான திருத்தங்களைத் தண்டனைச்சட்டக்கோவையில் மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. 

அத்தோடு இலங்கையில் தொழில்சங்கப்பிரதிநிதிகளும் சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் தொழிலாளர்கள் மற்றும் அடிமைத்துவத்தின் சமகாலவடிவத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக போராடுவதும் குரல்கொடுப்பதும் வரவேற்கத்தக்க அம்சங்களாகும்.

இருப்பினும் இலங்கையில் கரிசனைக்குரிய மேலும் பல விடயங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. விசேடமாக பின்தங்கிய பிரதேசங்களில் வசிக்கும் வறிய குடும்பங்களைச்சேர்ந்த பெண்கள் நுண்கடன்களால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். 

குறிப்பாக நுண்கடன் வழங்கல் நிறுவனங்கள் அக்கடனைப் பெறுபவர்களுக்குப் புரியாத மொழியில் விண்ணப்பப்படிவங்களை விநியோகித்து கையெழுத்துப் பெறுவதுடன் அவ்வாறு வழங்கும் கடன்களுக்கு வாராந்தம் 20 – 30 சதவீதம் வரையிலான வட்டியை அறவிடுகின்றன. இந்தத் தொகை நிறுவனங்களுக்கு நிறுவனம் வேறுபடுகின்றது. 

அதிக வட்டி அறவிடப்படுவதன் காரணமாகப் பெண்கள் பாரிய கடன்சுமைக்குள் சிக்கிக்கொள்கின்றார்கள். அதன் காரணமாகக் கடந்த சில வருடங்களில் மாத்திரம் 200 இற்கும் அதிகமான பெண்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றார்கள். 

அதுமாத்திரமன்றி கடனை மீளச்செலுத்தமுடியாத பெண்களிடம் நுண்கடன் வழங்கல் நிறுவனங்களின் முகவர்கள் பாலியல் இலஞ்சம் கோருவதாகவும் சில சந்தர்ப்பங்களில் வீட்டுவேலை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அறியமுடிகின்றது.

அடுத்ததாக இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு, குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பணிபுரியச்செல்லும் தொழிலாளர்கள் சித்திரவதைகளுக்கும் வன்முறைகளுக்கும் உள்ளாக்கப்படும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

அதுமாத்திரமன்றி இடைத்தரகர்கள் மற்றும் முகவர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பைப் பெற்றுத்தருவதாகக்கூறி ஏமாற்றி பெண்கள் உட்பட தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் போக்கு காணப்படுகின்றது. 

எனவே புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கும் அதேவேளை, அதனுடன் தொடர்புடைய சட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்படவேண்டும்.

மேலும் இலங்கையில் சிறுவர்கள் பணிக்கமர்த்தப்படல் என்பது ஒருசதவீதமாகக் காணப்படுகின்ற போதிலும், அவ்வாறு பணிக்கமர்த்தப்படும் சிறுவர்கள் வீட்டுவேலை, சுத்திகரிப்புப்பணி உள்ளடங்கலாக உடல் வலு அதிகமாகத் தேவைப்படுகின்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றார்கள். 

அதுமாத்திரமன்றி கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 18 மாதங்களாகப் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமையினால் கல்விச்செயற்பாடுகளிலிருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கையும் தொழிலில் ஈடுபடும் சிறுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கின்றது.

அடுத்ததாக பெருந்தோட்டத்துறையைப் பொறுத்தவரையில் தேயிலைத்தோட்டங்களில் பணிபுரியும் பெண்கள் நாளொன்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவிலான தேயிலைக்கொழுந்தைப் பறிக்கவேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். அந்த அளவினைப் பூர்த்திசெய்யாதவிட்டால், அவர்களுக்கான நாளாந்த சம்பளம் குறைத்து வழங்கப்படுகின்றது. 

தற்போதைய வாழ்க்கைச்செலவில் 1000 ரூபா என்பது ஒரு குடும்பத்தை இயக்குவதற்குப் போதுமானதாக இல்லை. அதுமாத்திரமன்றி பெருந்தோட்டங்களில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானோர் 50 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்கின்றார்கள். 

அதேபோன்று 60 வயதை எட்டியதும் பணியாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பன உரிய காலப்பகுதியில் வழங்கப்படாமல் இழுத்தடிப்புச்செய்யப்படுகின்றன. அதன் காரணமாக அவர்கள் தமது ஓய்வுகாலத்தின் பின்னரும் பணிக்கு வரவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள். 

மேலும் பெருந்தோட்டப்பகுதிகளில் மக்கள் சீரான கழிவறையோ அல்லது சமையலறையோ இல்லாத லயன் குடியிருப்புக்களிலேயே வசிக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு உரியாவாறான வீட்டுவசதிகளை வழங்குவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டும்.

மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகப் போராட்டங்களை முன்னெடுக்கின்றபோதிலும், அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதுடன் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். 

இத்தகைய சம்பவங்கள் இலங்கையில் சிவில் சமூக செயற்பாடுகளுக்கான இடைவெளி சுருங்கியிருப்பதையே காண்பிக்கின்றது. அதுமாத்திரமன்றி ஒன்றுகூடுவதற்கான உரிமையை மட்டுப்படுத்துவதற்கு கொவிட் – 19 சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அறியமுடிகின்றது. 

மேலும் தனியார்துறை வணிகங்கள், பெருந்தோட்டக்கம்பனிகள் மற்றும் ஆடையுற்பத்தித் தொழில்சாலைகளின் தலைமைப்பதவிகளுக்கு ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படுதல் ‘அதிகரித்த இராணுவமயமாக்கல்’ இடம்பெறுவதற்கு வழிவகுக்கின்றது. 

இராணுவ அதிகாரிகள் ஓய்வுபெற்றதன் பின்னர் தாம் விரும்புகின்ற தொழிலில் ஈடுபடுவதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கின்றது. 

இருப்பினும் அவர்கள் தலைமைப்பொறுப்பை வகிக்கும் தனியார் நிறுவனங்களில் ‘இராணுவ கலாசாரத்தை’ உட்புகுத்துவதற்கோ அல்லது பிரயோகிப்பதற்கோ முற்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதன்று என்று ஐ.நா விசேட அறிக்கையாளர் தெரிவித்தார்.

அதேவேளை இலங்கையில் அவதானிக்கப்பட்ட பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளுக்குத் தீர்வுகாணுதல், அடிமைத்துவத்தின் சமகால வடிவங்களை முடிவிற்குக்கெண்டுவருதல் ஆகியவற்றை முன்னிறுத்தி அரசாங்கம் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஆரம்பகட்ட பரிந்துரைகளையும் விசேட அறிக்கையாளர் ரொமோயா ஒபொகாடா முன்வைத்திருக்கின்றார். 

இந்நிலையில் அடுத்த வருடம் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் அவர் இலங்கை தொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பித்தக்கது. 

Leave A Reply

Your email address will not be published.