தமிழ் ஓசை
தமிழ் ஓசை

“இராணுவத்தை வெளியேற்றினால் தான் தமிழர் தாயகம் உய்யும்”- சி.வி.

0 136

 வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவத்தை வெளியேற்றினால் தான் தமிழர் தாயகம் உய்யும். தற்போது அடிமை நாடாக மத்திய அரசாங்கம் வடக்கு கிழக்கை போரின் பின் நிர்வகித்து வருகிறது என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


புதன்கிழமை (20) ஊடகங்களுக்கு வழங்கிய கேள்வி பதிலின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு….

(1)-கேள்வி:- ஒற்றையாட்சியை தமிழ்க் கட்சிகள் விரும்பாததேன்?

பதில்:- ஒற்றையாட்சித் தலைமைத்துவம் பெரும்பான்மையினக் கட்சிகள் வசம் இருக்கும் போது சிறுபான்மையினர் பாகுபாட்டுக்கு உள்ளாவார்கள் என்பதால்.

(2)-கேள்வி:- பெரும்பான்மையினக் கட்சிகளில் சிறுபான்மையினர் போதிய அளவு இடம் வகித்தால் இந்த நிலைமை எழாதல்லவா?

பதில்:- எழும். இலங்கை போன்ற நாடுகளில் எழும். இலங்கையில் பெரும்பான்மையினத் தலைவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கு உட்பட்டுள்ளார்கள்.

தமது இனம் இலங்கை நாட்டில் பெரும்பான்மை என்றாலும் பக்கத்தில், தமிழ் நாட்டில், பல கோடி தமிழர்கள் வாழ்ந்து வருவதால் தமக்கு எக் காலத்திலும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற எண்ணத்தில் இலங்கை வாழ் சிறுபான்மையினரைச் சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்றார்கள்.

தமது தாழ்வு மனப்பான்மையின் நிமித்தம் அவர்களை எழ விடாமல் தடுக்க வேண்டும் என்று சிந்திக்கின்றார்கள்.

அதனால் தம்முடன் சேரும் சிறுபான்மை இன மக்களையும் அவர்களே வழிநடத்துகின்றார்கள். சிறுபான்மை உறுப்பினர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்றார்கள்.

இதற்கு நல்ல உதாரணம் இதுவரை காலமும் பெரும்பான்மைக் கட்சிகளுடன் சேர்ந்து பயணித்த தமிழ்த் தலைவர்களே. பாகுபாட்டுக்குட்படும் சிறுபான்மையினரை அவர்களால் சட்ட ரீதியாகக் காப்பாற்ற முடியாது போய்விட்டது. தனிப்பட்டவர்களை அவர்கள் காப்பாற்ற முடியும். 


ஆனால் இனங்களின் உரித்துக்களைப் பெற்றுத் தரமுடியாது. எனவே ஒற்றையாட்சியில் பெரும்பான்மையினரின் சிந்தனைகளே மேலோங்கி நிற்பன.


ஆனால் சிந்திக்கும் திறன் கொண்ட, பாகுபாட்டு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காத, மனித உரிமைகள் மீது பற்றுக் கொண்ட, நியாய சிந்தனை பெற்ற பெரும்பான்மைத் தலைவர்கள் ஒரு நாட்டில் இருந்தால் அவர்கள் தாமாகவே சிறுபான்மை இன மக்களைக் காப்பாற்றும் வகையில் அவர்களின் உரித்துக்களைப் பாதுகாக்கும் வகையில் சட்டம் இயற்றுவார்கள்.

அதாவது அதிகாரப் பகிர்வை மேற்கொண்டு சிறுபான்மையர் பெருவாரியாக வாழும் இடங்களில் அவர்கள் தங்களைத் தாங்களே ஆள வழிவகுப்பார்கள். ஆனால் பொதுவாக இன்றைய சிங்கள மக்கட் தலைவர்கள் இன ரீதியான சிந்தனைகளிலேயே ஊறியிருக்கின்றனர்.

அதற்கு முக்கிய காரணம் சிங்களவர் பற்றிய உண்மை வரலாற்றை அவர்கள் உணராததாலேயே. தமிழ் மக்களின் தொன்மை பற்றி அவர்கள் அறியாததாலேயே. 
ஆகவே அவர்களின் தலைமைத்துவத்தில் செயற்படுகின்ற ஒற்றையாட்சி தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்காது.

ஒற்றையாட்சியின் கீழ் தமிழ் மக்களின் பாரம்பரிய தாயக நிலங்கள் பறிபோவன. தற்போது அது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.