Developed by - Tamilosai
அரசியல் கட்சி பெரிதாக இருப்பினும், சிறிதாக இருப்பினும் ஒன்றாக ஒரே நோக்கத்திற்காக போராடியவர்களை யாராலும் பிரிக்க முடியாது.
அவர்கள் எமது ஆதரவாளர்கள் இல்லை. அவர்கள் நம் கைக்கூலிகள் இல்லை. எனவே அன்று இருந்த அனைத்து கட்சிகளும் இணைந்திருக்க வேண்டும். அந்த ஒற்றுமையைப் பாதுகாப்பது பிரதான கட்சியான எமது பொறுப்பு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பெருமையுடன் சுபீட்சத்தை நோக்கி எனும் தொனிப்பொருளில் கொழும்பு தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் இன்று முற்பகல் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஐந்தாவது தேசிய மாநாட்டில் உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுவர்களில் ஓவியங்களை வரைந்து அரசியலினால் நாட்டை அசிங்கப்படுத்த வேண்டாம் என்று கூறிய இளைஞர்கள் இன்று நாட்டை விட்டு வெளியேறுவதற்காக கடவுச்சீட்டு பெறுவதற்காக வரிசையில் நிற்கின்றனரா என்பதைக் கண்டறிந்து அவர்களை மீண்டும் இந்நாட்டிற்கு கொண்டுவரக்கூடிய அரசியலில் ஈடுபடுவதே பொதுஜன பெரமுனவிற்குள்ள வரலாற்று எதிர்கால பணியாகும் என பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
பொதுஜன பெரமுனவின் ஐந்தாவது ஆண்டு விழாவில் நாம் இன்று இணைந்து கொண்டுள்ளோம்.
புதிய கட்சியில் ஐந்து வருடங்களுக்குள் ஜனாதிபதி ஒருவரை உருவாக்கி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்ற அதிகாரத்தைப் பெற்று ஐந்தாவது ஆண்டு விழாவை கொண்டாட முடியும் என அன்று இந்நாட்டில் யாரும் நம்பவில்லை.
எனினும், புதிய கட்சியொன்றுக்கு வரலாற்று ரீதியில் மேற்கொள்ளக்கூடிய பெரும் மாற்றத்தை நாம் இன்று ஏற்படுத்தியுள்ளோம்.
அதற்காகச் சிறைக்குச் செல்லவோ அல்லது நடுவீதியில் நிற்கவோ தயாரான நிலையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைவரையும் இத்தருணத்தில் கௌரவத்துடன் நினைவுகூருகிறேன்.
ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலிலும் இனவாத கோரிக்கைகளை அனுமதிக்க வேண்டியிருந்தது. எவ்வாறாயினும், இவ்வாறான இனவாத அரசியல் கட்சிகளின் தாக்கத்திற்கு ஆளாகாமல் ஜனாதிபதி ஒருவரை எம்மால் உருவாக்க முடிந்துள்ளது.
அது தமிழ், முஸ்லிம் மக்களிடம் இருந்து விலகி அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதல்ல. தமிழ், முஸ்லிம் இனத்தவருடன் மேலும் நெருக்கமாக்க முடிந்தால், அதுவே பொதுஜன பெரமுனவினால் செய்யக்கூடிய சிறந்த காரியம்.
அத்துடன் இனவாத தமிழ் – முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தாளத்திற்கு ஆடாமல் மூன்றில் இரண்டு பாராளுமன்ற பெரும்பான்மையை எம்மால் பெற முடிந்தது. 70 வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியை ஒரு ஆசனத்திற்கு கீழே இறக்க மொட்டினால் முடிந்தது.
இது ஒரு வரலாற்று வெற்றி, அத்தகைய வெற்றியை வழங்குவதன் மூலம் மக்களும் தேசமும் எங்களிடம் என்ன கோரினர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.