தமிழ் ஓசை
தமிழ் ஓசை

“இனப்படுகொலை” நீதியை நிலைநாட்டுவது இலங்கைக்கு வெளியிலேயே சாத்தியம்

0 286

இலங்கையில் இடம்பெற்ற மனிதகுலத்திற்கு எதிரான மிகமோசமான குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தற்போது அதிகாரத்தில் இருக்கின்றார்கள்.

அவர்கள் தண்டனைகளிலிருந்து தம்மைத்தாமே பாதுகாத்துக் கொண்டிருப்பதுடன் அர்த்தமுள்ள நீதி மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையை முன்னெடுத்துச் செல்வதிலும் தடைகளை ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.

எனவே இவ்விவகாரத்தில் நீதியை நிலைநாட்டுவதென்பது இலங்கைக்கு வெளியிலேயே சாத்தியப்படும் என்று சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தரணி டேவிட் மற்றாஸ் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான மிகமோசமான மீறல்களால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக நீதி நிலைநாட்டப்படுவதை உறுதிசெய்வதற்கான பரப்புரையை கனடாவைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழர் உரிமைக்கான குழுமம் ஆரம்பித்திருக்கின்றது.

அதன் ஓரங்கமாக ஈழத்தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் நீதிநிலைநாட்டப்படுவதை வலியுறுத்தியும் இலங்கையில் தண்டனையின்மைக்கு எதிராகப்போராடுகின்ற முக்கியமானதோர் சர்வதேச நடவடிக்கையாகவும் ரோமசாசனத்தின் 15 ஆவது பிரிவின் கீழ் பூர்வாங்க ஆய்வொன்றை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தும் தகவல் அறிக்கையொன்று அக்குழுமத்தால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குரைஞர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துத் தெளிவுபடுத்தும் அதேவேளை இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக நீதியை நிலைநாட்டுவதற்கான இயலுமை குறித்து ஆராயும் வகையில் கனடாவின் டொரொன்டோ நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் அங்கு மேலும் கூறியதாவது:

இலங்கையில் இறுதிக்கட்டப்போரின் போது நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்கான நீதியை நிலைநாட்டுமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவந்த நிலையில், தற்போது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பங்களிப்புடன் அந்த நீதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் வியாபித்துவாழும் பெரும் எண்ணிக்கையான ஈழஅகதிகள் தோற்றம் பெறுவதற்குக் காரணமாகியுள்ளன. எனவே இந்தக் குற்றங்கள் சர்வதேச ரீதியில் மிகுந்த அவதானத்திற்குரியவையாகும்.

மேற்குறிப்பிட்டவாறான மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்கள் இலங்கையில் அதிகாரத்தில் இருக்கின்றார்கள்.

அவர்கள் தம்மைத்தாமே தண்டனைகளிலிருந்து பாதுகாத்துக்கொண்டிருப்பதுடன் அர்த்தமுள்ள நீதி மற்றும் நல்லிணக்கப்பொறிமுறையை முன்னெடுத்துச்செல்வதிலும் தடைகளை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். எனவே இலங்கைக்கு வெளியிலேயே இதற்கான நீதியை உறுதிசெய்துகொள்ளமுடியும்.

அந்தவகையில் இவ்விவகாரத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை எவ்வாறு நாடுவது என்ற கேள்வி காணப்படுகின்றது.
 இலங்கையில் இடம்பெற்ற மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கான பூர்வாங்க ஆய்வொன்றை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி தமிழர் உரிமைக்கான குழுமத்தால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குரைஞர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் நீதிமன்றச் செயற்பாடுகளுக்கு அவசியமான சமர்ப்பணங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதென்பது சர்வதேச சமூகத்தைப் பொறுத்தமட்டில் புதியதொரு தலைப்பல்ல.

போர் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டதிலிருந்து தற்போதுவரை இவ்விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தொடர்ச்சியாக அவதானம் செலுத்திவருவதுடன் அழுத்தங்களையும் பிரயோகித்துவருகின்றது.

எனவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆகிய இரு சர்வதேச மனித உரிமைக்கட்டமைப்புக்களையும் எவ்வாறு ஓரணியில் கொண்டுவருவதென்பதே தற்போதுள்ள கேள்வியாகும்.

எது எவ்வாறெனினும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கான மருந்தென்பது நீதிவழங்கல் மூலம் மனிதாபிமானத்தை நிலைநாட்டுவதிலேயே தங்கியிருக்கின்றது என்று சுட்டிக்காட்டினார்.

அதுமாத்திரமன்றி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கொன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் முறை தொடர்பில் விளக்கமளித்த அவர், இலங்கை குறித்த சமர்ப்பணங்களை அடிப்படையாகக்கொண்டு அதுபற்றிய விசாரணைகள் எத்தகைய கோணத்தில் கையாளப்படக்கூடும் என்றும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.