தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இந்து அறநெறிப் பாடசாலைகளுக்கான 100 மாதிரி நூலகங்கள் அமைப்பு

0 263

அரசாங்கத்தின்  ‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு’ என்ற கொள்கைச் சட்டத்தின் கீழ், சட்டத்தை மதிக்கும் குணநலங் கொண்ட ஒழுக்க நெறியான சமூகம் ஒன்றை உருவாக்குதல் என்ற இலக்கிற்கு அமைவாக, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், ‘கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே’ என்ற இந்து சமய அறநெறிக் கல்வியின் மகுட வாசகத்திற்கு அமைவாகவும் ‘இளம் இந்துச் சிறார்களின் இதயங்களிலுள்ள தெய்வீகத் தாமரையை மலரச் செய்து அவர்களின் ஆளுமையையும் திறமைகளையும் மலர்ந்து விரிவடைய வைக்கும் கல்வியை வழங்குதல்’ என்ற இலட்சிய நோக்கிற்கு அமைவாகவும் அறநெறிக் கல்வி அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

இளம் இந்துச் சிறார்களுக்கு அவர்கள் மனம் ஏற்றுக்கொள்கின்ற வளரும் சிறு பருவத்திலேயே, வாழ்வின் உயர்வான எண்ணங்களையும் ஒழுக்கந் தரும் பழக்க வழக்கங்களையும் அவர்கள் தம் வாழ்விற் கடைப்பிடித்து வாழ்வதற்கு வாசிப்பினையும் ஒரு கருவியாகப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் அறநெறிக் கல்வி அபிவிருத்தித் திட்டத்தில் நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டின் ஒரு மைற்கல்லே அறநெறிப் பாடசாலைகளுக்கான மாதிரி நூலகம் அமைக்கும் செயற்றிட்டம் ஆகும்.

இச் செயற்றிட்டத்திற்கு அமைவாக, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் நாடளாவிய ரீதியில் இந்து சமய அறநெறிப் பாடசாலைகள் இயங்குகின்ற மாவட்டங்களைக் கருத்திற்கொண்டு, முதற் கட்டமாக நூறு அறநெறிப் பாடசாலைகளுக்கான மாதிரி  நூலகங்கள் அமைக்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டு, அதற்கான தளபாட வசதிகளுக்கும் நூற் கொள்வனவிற்கும் நிதியுதவி நல்கும் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

முதற்கட்டமாக 23 மாவட்டங்களில் 100 மாதிரி நூலகங்கள் பின்வரும் மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ளன.

கொழும்பு – 6, கம்பஹா – 2, கேகாலை- 2, குருநாகல்- 2, களுத்துறை- 2, காலி – 2 இரத்தினபுரி- 4, புத்தளம்- 4, கண்டி – 6, மாத்தளை – 4, பதுளை- 6, நுவரெலியா – 6, பொலநறுவை- 2, மொனராகலை- 2, மாத்தறை – 2, அம்பாறை- 6, மட்டக்களப்பு- 7, திருகோணமலை- 5, யாழ்ப்பாணம்- 12, வவுனியா- 4, கிளிநொச்சி – 6, முல்லைத்தீவு – 4, மன்னார் – 4

இச் செயற்றிட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட  முன்மாதிரி அறநெறி நூலகம் நாளை 16 ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.