Developed by - Tamilosai
இலங்கையில் இழுவைப் படகுகள் தடைச்சட்டத்தை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தியிருந்தால் நேற்றைய தினம் தமிழக மீனவரின் உயிர் பிரிந்திருக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எனவே குறித்த சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்திய அவர், தாம் நடத்திய போராட்டத்தினை இந்தியாவிற்கு எதிரான போராட்டமென சித்திரிக்க பலர் முயற்சி செய்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சுமந்திரன் இதனைக் கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
”நாங்கள் நடத்திய போராட்டத்தினை இந்தியாவிற்கு எதிரான போராட்டமென சித்தரிப்பதற்கு பலர் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு இந்தியாவுக்கு எதிரான போராட்டம் அல்ல.
இந்திய அரசாங்கமே 2016ஆம் ஆண்டு தடை செய்யப்படவேண்டிய தொழில்முறை என உத்தியோகபூர்வமாக கூட்டறிக்கையில் அறிவித்து இருக்கின்றது. ஆகவே இது இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடும் தான்.
இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு என்று வேண்டுமென்றே ஒரு கதையினை கட்டி இந்த மீனவர்களுடைய போராட்டத்தினை வலுவிழக்கச் செய்கின்ற செயற்பாட்டில் பலர் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள் அதை முற்றாக நிராகரிக்கின்றோம்.
இந்தத் தொழிலை யார் செய்தாலும் தடுக்கப்பட வேண்டும் என்பது தான் எமது கோரிக்கை. இந்த சட்டத்தில் இருக்கின்ற படியால் அந்த சட்டத்தை அமுல்படுத்துமாறு தான் கோரிக்கை விடுக்கின்றோம்.
இந்தச் சட்டம் உள்ளதென்பதை தெளிவாக வெளிப்படுத்தினால் இப்படியான அநாவசியமான இழப்புகள் ஏற்படுவதைத் தடுக்கலாம் என அவர் கூறியுள்ளார்.