தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஆரியகுளத்தில் மதங்களை திணிக்காதீர்- சிவாஜிலிங்கம் எச்சரிக்கை!

0 105

ஆரியகுளத்தில் மதங்களை திணிக்க முற்படக் கூடாது அவ்வாறு மதங்களை திணிக்க முற்பட்டால் அந்தியேட்டி அஸ்தியை கரைக்க தமிழ் மக்கள் முற்படுவார்கள். வீணாக இதனை பிரச்சனையாக்க வேண்டாமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக்கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ். ஊடக மையத்தில் நேற்று (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆரிய குளப்புனரமைப்பு திறப்பு விழாவில் கலந்து கொள்ள வருகின்ற பொழுது சிங்கள பௌத்த எஜமான்களை திருப்திப்படுத்துவதற்காக ஆளுநர் கண்டிய மேளதாளங்களுடன் வந்தபோதுஇ சரி வந்து விட்டு போகட்டும் என்று விட்டுவிட்டோம்.

அன்றையதினம் குளத்தை திறக்க வந்திருந்த பொழுது ஆளுநர் யாருடைய ஆளுகைக்குள் ஆரியகுளம் உள்ளது என்பதைப் பற்றி விசாரித்து இருக்கலாம். ஆனால் விடிய விடிய இராமர் கதை விடிந்தால் ராமன் சீதைக்கு என்ன முறை என்பது போலவே ஆளுநரின் செயற்பாடு காணப்படுகின்றது.

யாழ் மாநகர முதல்வர் ஆரியகுள அழைப்பிதழை வழங்கிய பொழுது இது யாருடைய ஆளுகைக்குள் இருந்தது என்பதை அவரிடம் கேட்டிருக்க வேண்டும்.

பௌத்தர்கள் விரும்பினால் விகாரைக்கும் இந்துக்கள் விரும்பினால் ஆலயங்களுக்கும் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கும் முஸ்லீம்கள் பள்ளிவாசல்களுக்கும் செல்ல முடியும். ஆரியகுளத்திற்கு மதச்சாயம் தேவையில்லை.மதங்களை திணிக்க முற்படக் கூடாது அவ்வாறு மதங்களை திணிக்க முற்பட்டால் அந்தியேட்டி அஸ்தியை கரைக்க தமிழ் மக்கள் முற்படுவார்கள். வீணாக இதனை பிரச்சனையாக்க வேண்டாம்.

தொல்லியல் என்று சொல்கிறீர்கள். தொல்லியல் சின்னங்களில் ஏன் மதத்தைக் கொண்டு வருகின்றீர்கள்.

குருந்தூர்மலையை தொல்லியல் என்று மூடி வைத்துவிட்டு பல விடயங்களை செய்து வருகின்றீர்கள். இவையெல்லாம் எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வியெழுப்பினார்.

ஆரியகுளம் சேற்றுடன் காணப்படும் போது ஒருவரும் திரும்பி பார்க்கவில்லை. அதன் பின்னர் யாழ். மாநகர சபையின் முயற்சியால், தற்போது அழகாக சீரமைக்கப்பட்டு மக்கள் தமது பொழுது போக்கு நேரத்தை செலவழிப்பதற்காக அங்கு வருகின்றனர்.

ஆரிய குளத்தை அரசு கையகப்படுத்தப் பார்ப்பது எமக்கு தெரியும். வடமாகாண ஆளுநர் ஜனாதிபதியின் எடுபிடி, அவர் தன்னுடைய வேலைகளை மட்டும் பார்க்க வேண்டும். எமக்கு விளையாட்டு காட்ட வேண்டாம். இந்த விடயத்தில் யாழ் மாநகர முதல்வரை பணியவைக்கும் செயற்பாட்டுக்கு தமிழ் மக்கள் துணைபோக மாட்டார்கள் என்றார்

Leave A Reply

Your email address will not be published.