தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் தேர்தலில் களமிறங்குவார்

0 222

எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க என எவர் போட்டியிட்டாலும் அது பெரும் சவாலே அல்லவென தெரிவித்துள்ள விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, நாட்டின் தற்போதைய அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் தேர்தலில் களமிறங்குவார் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

கொவிட் வைரஸ் தொற்று பரவலை கருத்திற் கொண்டு கடந்த இரண்டு வருடங்களாக காலமாக செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன விலகியிருந்ததாகவும், இந்தச் சந்தர்ப்பத்தை எதிர்தரப்பினர் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாகவும், நாவலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

“சுபீட்சமான எதிர்காலக் கொள்கை திட்டத்தின் ஊடாக நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முழுமைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் இடம்பெறும் காலம் வரை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் கட்டம் கட்டமாக செயற்படுத்தப்பட்டுள்ளது. சாதாரண தர பரீட்சையில் தோல்வியடைந்த ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டது. 60 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச நியமனங்கள் வழங்கப்பட்டதுடன், ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி செயற்திட்ட பணிகள் செயற்படுத்தப்பட்டன. கொவிட் தடுப்பூசி செலுத்தும் செயற்திட்டம் சிறந்த முறையில் வெற்றிப் பெற்றுள்ளது. நாட்டு மக்கள் உயிர்வாழ்வதற்கான சூழலை அரச தலைவர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கொவிட் வைரஸ் தொற்றுப்பரவல் ஏற்பட்டிருந்தால் நாட்டையும், நாட்டு மக்களையும் கடவுள் தான் காப்பாற்றியிருக்க வேண்டும். கொவிட் தாக்கத்தினால் அதிக மரணங்கள் பதிவாகிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பிடித்திருக்கும். மைத்திரி, ரணில் முரண்பாட்டிற்கு நாட்டு மக்கள் பலியாகியிருப்பார்கள்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுரகுமார திஸாநாயக்க, மைத்திரிபால சிறிசேன, பாட்டலி சம்பிக்க, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் அரச தலைவர் வேட்பாளர்களாக போட்டியிடவுள்ளார்கள்.

கோட்டாபய ராஜபக்சவிற்கு இவர்கள் ஒரு சவால் அல்ல. 2024ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலில் பொதுஜன பெரமுனவே வெற்றிபெறும். அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவே மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவார்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.