தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அரசுக்கு எதிராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியாக்கிரக போராட்டம்

0 454

ஜனாதிபதியும், அரசாங்கமும் உடனடியாக பதவி விலக வேண்டும் எனக் கோரி புத்தளம் – கொழும்பு முகத்திடலில் இன்று இரவு முதல் சுழற்சி முறையிலான சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21 ஆம் திகதி முதல் ´கோட்டா கோ கம´ கிளையொன்று புத்தளம் , கொழும்பு முகத்திடலில் அமைக்கப்பட்டு அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கூடாரங்கள் அமைக்கப்பட்டிருப்பதுடன், இன, மத வேறுபாடுகளின்றி சிலர் அங்கு நிரந்தரமாக தங்கியிருந்தும் இரவு, பகலாக தமது எதிர்ப்புக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று (27) இரவு முதல் புத்தளம் கொழும்பு முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள ´கோட்டா கோ கம´ வில் சுழற்சி முறையிலான சத்தியாக்கிரக போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புத்தளத்தின் மூத்த அரசியல்வாதியுமான டாக்டல் எம்.ஐ.இல்யாஸ் குறித்த சுழற்சி முறையிலான சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.

மேற்படி இந்த சத்தியாக்கிரக போராட்டத்திற்கு தமிழ், பௌத்த மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்களும், பொதுமக்களும் தமது ஆதரவினை தெரிவித்துள்ளதுடன், அவர்களும் மேற்படி சுழற்சி முறையிலான சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஈரானிய மக்கள் அகிம்சை வழியில் போராடி வெற்றிபெற்றதைப் போலவே, இலங்கையிலும் மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக எதுவிதமான பேதங்களுமின்றி தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருவதாக போராட்டத்தில் ஈடுபடும் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புத்தளத்தின் மூத்த அரசியல்வாதியுமான டாக்டல் எம்.ஐ.இல்யாஸ் தெரிவித்தார்.

மகாத்மா காந்தி உப்பு சத்தியாக்கிரகத்தை முன்னெடுத்து நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தார். அதுபோலவே நாங்களும் மகாத்மா காந்தியின் அகிம்சை வழியில் இவ்வாறு போராட்டங்களை நடத்தி வருவதாகவும் அவர் சொன்னார்.

பொதுமக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து ஆட்சியாளர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு, தகுதியானவர்களிடம் இந்த நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.