Developed by - Tamilosai
இலங்கையுடனான தமது வெளியுறவுக்கொள்கையின் அடிப்படையாக மனித உரிமைகளே காணப்படுவதாகவும் நிரந்தர சமாதானத்தை அடைந்துகொள்வதற்கான தேடலில் தமிழ் மக்களுக்கான ஆதரவை வழங்கத்தயாராக இருப்பதாகவும் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச்செயலாளர் டொனால்ட் லூ, இலங்கையிலிருந்து சென்ற எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினரிடம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன் மற்றும் கலாநிதி நிர்மலா சந்திரஹாசன் ஆகியோர் அடங்கிய சட்டநிபுணர் குழு கடந்த 13 ஆம் திகதி அமெரிக்கா பயணமானது.
தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யும் வகையிலான அரசியலமைப்பு உருவாக்கம் பற்றிய கலந்துரையாடல்களை முன்னெடுக்கும் நோக்கில் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இக்குழுவினருடன் உலகத்தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் குழுவும் இணைந்து கடந்த வாரம் முதல் அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளுடனான சந்திப்புக்களில் ஈடுபட்டுவருகின்றன.
அதன் ஓரங்கமாக எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான குழுவினர் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பணியகத்தின் அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியிருப்பதுடன் நிகழ்நிலை ஊடாக இணைந்துகொண்ட பணியகத்தின் உதவிச்செயலாளர் டொனால்ட் லூவுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பணியகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது,
‘இலங்கையில் நல்லிணக்கத்தை நிலைநாட்டுதல் தொடர்பில் கலந்துரையாடும் வகையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மற்றும் உலகத்தமிழர் பேரவை ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது, மனித உரிமைகளே இலங்கையுடனான அமெரிக்க வெளியுறவுக்கொள்கையின் அடிப்படையாகக் காணப்படுகின்றது என்பதை உதவிச்செயலாளர் டொனால்ட் லூ அடிக்கோடிட்டுக்காட்டினார்.
நிறைபேறான சமாதானத்தை அடைந்துகொள்வதற்கான தேடலிலும் அவர்களது நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயித்துக்கொள்வதிலும் இலங்கைத்தமிழ் மக்களுடன் அமெரிக்காவும் இணைந்துகொள்வதுடன் அதற்காகக் குரல்கொடுக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை இக்குழுவினர் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு பேரவையின் உயர்மட்ட அதிகாரிகளுடனான சந்திப்பில் ஈடுபட்டமை உலகத்தமிழர் பேரவையின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின்போது இலங்கையில் இடம்பெற்ற போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிநிலைநாட்டப்படுவதை உறுதிசெய்யும் அதேவேளை, அரசியல் தீர்வை அடைந்துகொள்வதில் அமெரிக்காவின் வகிபாகம் மற்றும் அதனை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக உலகத்தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
சுமந்திரன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் ஏற்கனவே வெள்ளை மாளிகை வெளிவிவகாரக்குழுவின் உயர்மட்ட அதிகாரிகளுடன் சந்திப்புக்களை நிகழ்த்தியிருந்ததுடன் இனநல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.