Developed by - Tamilosai
பேச்சளவில் அனைத்தையும் சாதித்து விடலாம் என்ற நிலையில் இருந்துக் கொண்டு அரசாங்கம் தீர்மானங்களை விரைவாகச் செயற்படுத்துகிறது.
அதனால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துவதில்லை.
நல்லாட்சி அரசாங்கம் செயற்படுத்திய 100 நாள் செயற்திட்டத்தை முடிந்தால் செயற்படுத்துமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுகிறேன்.
அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களால் இவ்வருடத்துடன் விவசாயத்துறை முழுமையாக அழிவடையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ’43 ஆவது படையணி’ கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்;
விவசாயத்துறை தொடர்பில் ஜனாதிபதி முன்னெடுத்த தவறான தீர்மானம் முழு நாட்டையும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.
நனோ-நைட்ரஜன் திரவ உர பயன்பாட்டினால் சிறந்த விளைச்சலை பெற முடியாது. அரசாங்கத்தின் தவறான தீர்மானத்தால் டொலர் நெருக்கடி உச்சம் பெற்றுள்ளது.
இதன் காரணமாக இரசாயன உரம் இறக்குமதி செய்யப்பட்டு அதனை மறைப்பதற்காக சேதனப் பசளை என்ற நாடகத்தை அரசாங்கம் அரங்கேற்றுகிறது.
அனைத்து வகையான பயிர்ச்செய்கைகளுக்கும் 2 கோடி மெற்றிக்தொன் சேதன பசளை அவசியமாகும்.
தேசிய மட்டத்தில் சேதன பசளையை உற்பத்தி செய்வது இலகுவான காரியமல்ல. 2018 ஆம் ஆண்டு சேதன பசளைத் திட்டம் தோல்வியடைந்தது.
உரப்பிரச்சினை காரணமாக விவசாயிகள் தமக்குத் தேவையான அளவிற்கு மாத்திரம் பயிர்ச் செய்கையில் ஈடுபடுகிறார்கள். இதனால் எதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும்.
அரசாங்கத்தின் அமைச்சர்கள் வெறும் வாய்ச்சொல் வீரர்களாக மாத்திரம் உள்ளார்கள்.சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திரகரிப்பு நிலையத்திற்கு இணையாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதாக வலு சக்தி அமைச்சர் குறிப்பிட்டுக்கொள்கிறார்.
எதிர்வரும் மாதம் முதல் எண்ணெய் சுத்திரகரிப்பு நிலையத்திற்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
எண்ணெயை பெற்றுக் கொள்வதற்காக கோரப்பட்ட விலைமனுக்கோரலை சர்வதேச நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
மத்திய வங்கியும்,இலங்கை வங்கியும் வெளியிடும் கடன் பத்திரத்தை சர்வதேச நிறுவனங்கள் அங்கிகரிக்காது ஏனெனில் இலங்கையின் பொருளாதாரம் அந்தளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம் நிலக்கரியை பெற்றுக் கொள்வதிலும் நெருக்கடி நிலை காணப்படுகிறது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 12 மணித்தியாலம் மின் துண்டிப்பை எதிர்க் கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும்.
இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை கருத்திற்கொண்டு உலக நாடுகள் இலங்கைக்கு கடனுதவி வழங்க முன்வருவதில்லை.
டொலர் பிரச்சினை காரணமாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரச குடும்பத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.அவர்கள் சுகபோகமாக வாழ்கிறார்கள்.
2014 ஆம் ஆண்டு ‘ஆல பாலு ஆர்திகய ‘என்ற புத்தகத்தை வெளியிட்டேன். முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளுக்கு பின்னால் மறைந்துள்ள கடன் சுமையின் தாக்கங்களை அப்புத்தகத்தில் குறிப்பிட்டேன்.
பயனற்ற அபிவிருத்திகளுக்காக பெற்றுக் கொள்ளப்பட்ட அரச முறை கடன்களினால் நாடு இன்று வரை பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்க் கொண்டுள்ளது.
அரசாங்கத்தில் உள்ளவர்கள் பேச்சளவில் அனைத்தையும் சாதித்து விடலாம் என கருதிக் கொண்டு தீர்மானங்களை முன்னெடுக்கிறார்கள்.
விரைவான தீர்மானங்களினால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தொடர்பில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை.
நல்லாட்சி அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தில் விடயங்களை முடிந்தால் செயற்படுத்துமாறு அரச தலைவர்களுக்கு சவால் விடுகிறேன்- என்றார்.