Developed by - Tamilosai
திருகோணமலை தள வைத்தியசாலை கட்டடத்தின் கூரை மேல் ஏறி அம்பியுலன்ஸ் வண்டி சாரதியொருவர் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளார்.
தனக்கு வழங்கப்பட்ட இடமாற்றமானது முறையற்ற விதத்தில் சட்டத்துக்கு முரணான முறையில் தன்னை வேறொரு வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை தள வைத்தியசாலை பணிப்பாளருக்கு எதிராகவும் தனது இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு கோரியும் குறித்த நபர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கெமுனு துமிந்த திலக (வயது – 42) என்ற அம்பியுலன்ஸ் வண்டி சாரதி திருகோணமலை வைத்தியசாலையில் எட்டு வருடத்துக்கும் அதிகமாகக் கடமையாற்றிய நிலையில் தன் மீதான பொய்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுக் குறித்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அதற்கான தண்டனையைத் தான் அனுபவிக்கத் தயாராக இருப்பதாகவும் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்து தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் சரியான நீதி கிடைக்க வேண்டும் எனவும் தனது முறையற்ற இடமாற்றத்தை ரத்து செய்யுமாறும் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் திருகோணமலை தள வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஐ.டபிள்யூ.எம்.ஜே.விக்ரமரத்னவிடம் கேட்ட போது அவர் தெரிவிக்கையில்,
குறித்த சாரதி தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் என்ற வகையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகக் குறித்த சாரதியின் இடமாற்றம் இடம்பெற்றது.
குறித்த சாரதியைத் திருகோணமலையிலிருந்து கந்தளாய் பொது வைத்தியசாலைக்கு இடமாற்றியுள்ளதாகவும், இடமாற்றத்திற்குப் பின்னர் குறித்த சாரதி தனது வாகனம் மற்றும் விடுதியினை உரிய முறையில் மீண்டும் இது வரை கையளிக்கவில்லை எனவும் பணிப்பாளர் குற்றம் சுமத்தினார்.
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானவை எனவும் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் தன்மீது போதைவஸ்து பயன்பாடு இருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அதனைத்தான் மறுப்பதாகவும் அவ்வாறு சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை வைத்திய அறிக்கை மூலம் நிரூபிக்கப்பட்டால் தமக்கு எவ்வாறான தண்டனை வழங்கப்பட்டாலும் தாம் ஏகமானதாக ஏற்றுக் கொள்வதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாரதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.