தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அமைச்சு பதவிக்காக அலைகிறாரா ராதா? – கணபதி கனகராஜ் அறிக்கை

0 162

எதிர்க்கட்சியில் இருப்பதால் எதையும் பேசி அரசியல் நடத்தலாம் என்பதை பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களுக்கு அரசியல் முகவரியைப் பெற்றுக் கொடுத்தது யார் என்பதை தனது மனசாட்சியை தொட்டு தன்னைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டும் என்று ,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் , மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
மலையகத்தை மறந்துவிட்டு யார் அமைச்சுப் பதவி கொடுத்தாலும் அவர்களின் பின்னால் சென்று துதிபாடி அரசியல் பிழைப்புவாதம் நடத்தும் நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எப்போதும் இருந்ததில்லை. இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விரல் நீட்டி குற்றம் சுமத்துவார்கள் தமது கடந்த கால வரலாற்றை சற்று சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
பாராளுமன்றம் செல்வதற்கு மட்டும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பயன்படுத்திவிட்டு அமைச்சுப் பதவிக்காக யார் யார் பின்னால் எல்லாம் அலைந்து திரிந்த வரலாறு இன்று சிலருக்கு மறந்து போய்விட்டது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக மக்களுக்கு வாக்குரிமை பெற்றுக்கொடுத்து அவர்களுக்கு அரசியல் அந்தஸ்தை பெற்று கொடுத்ததினால் தான் இன்று பாராளுமன்றத்தில் பலர் அமர்ந்து இருக்கிறார் என்பதை ராதாகிருஷ்ணன் மறந்து விடக்கூடாது.
சரியானதை சரியான நேரத்தில் சரியாக பேசும் பண்பாட்டை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எப்போதும் கொண்டிருக்கிறது. தற்போதைய ஜனாதிபதி உட்பட இந்த நாட்டை ஆட்சி செய்த எந்த ஒரு ஜனாதிபதியின் பின்னாலும் துதிபாடி அரசியல் நடத்திய வரலாறு இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு இல்லை.
பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தற்போது தான் தலைமை வகிக்கும் மலையக மக்கள் முன்னணியின் கொள்கையே மலையகத்துக்கு தனித்துவமான ஒரு மாகாணம் வேண்டும் என்பதாகும் . இன்று மலையகம் சம்பந்தமாக பேசுகின்ற ராதாகிருஷ்ணன் என்றாவது பாராளுமன்றத்தில் மலையக மக்களுக்கு தனித்துவமான மாகாணசபை வேண்டும் என்ற மலையக மக்கள் முன்னணியின் கொள்கை சம்பந்தமாக பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறாரா? தான் தலைமை வகிக்கின்ற சொந்த கட்சியின் கொள்கையை கூட தெரியாதவர்கள் அதைப் பற்றி பேச பயப்படுபவர்கள் காங்கிரசின் பொதுச் செயலாளர் பேசுவதை விமர்சனம் செய்வது வேடிக்கையாக இருக்கிறது.
மலையக மக்கள் முன்னணி அமைச்சுப் பதவி ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட கட்சி அல்ல என்பதை பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தான் தலைமை வைக்கின்ற கட்சியின் கொள்கைகளை கூட தெரியாதவர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரின் பாராளுமன்ற உரை சம்பந்தமாக விமர்சிப்பது வேடிக்கையாக இருக்கிறது எனவும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.