Developed by - Tamilosai
உக்ரைன் தன்னை தற்காத்துக் கொள்வதற்கு உதவியாக அந்நாட்டுக்கு அதிக மேம்பட்ட ரொக்கெட் அமைப்புகளை வழங்கவிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் அறிவித்துள்ளார்.
தனது எதிரிப்படைகளை நீண்ட தூரத்தில் இருந்து அதிக துல்லியமாக தாக்குவதற்கு இந்த ஆயுதங்களை தரும்படி உக்ரைன் நீண்ட காலமாக கோரி வந்தது.எனினும் இந்த ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யாவில் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தினால் இந்தக் கோரிக்கையை அமெரிக்கா இன்று வரை மறுத்து வந்தது.
ஆனால் நேற்று புதன்கிழமை கருத்துக்கூறிய பைடன், சக்திவாய்ந்த ஆயுத உதவிகள் உக்ரைனின் ரஷ்யாவுடனான பேச்சு வார்த்தைக்கான நிலையை வலுப்படுத்தும் என்றும் இராஜதந்திர தீர்வு ஒன்றுக்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார். நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு எழுதி இருக்கும் பைடன் கூறியிருப்பதாவது,“இதன் காரணமாகவே உக்ரைனில் உள்ள போர்க் களத்தில் முக்கிய இலக்குகளை அதிக துல்லியமாக தாக்குவதற்கு முடியுமாகும் வகையில் உக்ரைனியர்களுக்கு மேம்பட்ட ரொக்கெட் அமைப்புகள் மற்றும் வெடி பொருட்களை வழங்க நாம் தீர்மானித்துள்ளோம்” என்றார்.
மேற்கத்திய நாடுகள் உக்ரைனிய தேசியவாதிகளுக்கு ஆயுதங்களை குவித்து வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கிலவ்ரொவ் முன்னதாக குற்றம்சாட்டி இருந்தார். உக்ரைனை நோக்கி ஆயுதங்களுடன் வரும் எந்த ஒரு சரக்கும் ரஷ்யாவின் இலக்குகளாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பும் நேட்டோ நாடுகள் “நெருப்புடன் விளையாடுகிறது” என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சு எச்சரித்தது.