தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அமெரிக்காவுடனான ஒப்பந்தம் மூலம் இலங்கைக்கு 110 பில்லியன் ரூபா லாபம்

0 110

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்கை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதன் மூலம் இலங்கைக்கு 110 பில்லியன் ரூபா லாபம் கிடைக்கின்றது.

அத்துடன் எதிர்வரும் ஒன்றரை வருடத்தில் இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க இருக்கின்றோம் என இலங்கை மின்சார சபை பொது முகாமையாளர் பொறியியலாளர் எம்.ஆர். ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கெரவலப்பிட்டிய யுகதனவிய மின் உற்பத்தி நிலையத்தின் முதலீட்டு வேலைத்திட்டத்தின்  நன்மை தீமை தொடர்பான கலந்துரையாடல் தேசிய அபிவிருத்திக்கான ஊடக மையத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

திரவ இயற்கை வாயு மூலம் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளவே கெரவலப்பிட்டிய யுகதனவிய 2010 இல் அமைக்கப்பட்டது. 10 வருடமாகியும் அதனை எங்களால் முன்னெடுக்க முடியாமல் போனது.

கடந்த 10 வருடமாக இயற்கை சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒருவகையான எண்ணெய் ஊடாகவே மின் உற்பத்தி பெறப்பட்டு வந்தது.

நாட்டுக்குத் தேவையான மின்சாரத்தின் மூன்றில் ஒரு பங்கை நீர் மின் மூலமே பெறப்படுகின்றது. கெரவலப்பிட்டியவில் இருந்து 5 வீதம் வரையான மின்சாரமே பெறப்படுகின்றது.

அத்துடன் அரசாங்கத்தின் இலக்காக இருப்பது 2030 ஆம் ஆண்டாகும் போது நாட்டுக்குத் தேவையான மின் உற்பத்தியில் 70 வீதம் மீள் புத்தாக்க சக்தி ஊடாக பெறவேண்டும் என்பதாகும்.

அதன் பிரகாரம் திரவ இயற்கை வாயு மூலம் மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கெரவலப்பிட்டிய யுகதனவிய மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்கை  அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கு இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றாேம். என்றாலும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை. 

இது இரகசியமாக மேற்கொள்ளப்படுவதொன்று அல்ல. இதற்கு அமைச்சரவையால் 4 தடவைகள் அனுமதி கிடைக்கப்பெற்றிருக்கின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.