Developed by - Tamilosai
” இந்திய பிரதமர் நரேந்திர மோடி அன்று இலங்கை வரும்போது கறுப்புகொடி பறக்கவிடுமாறு அழைப்பு விடுத்தவர்கள், இன்று இந்தியாவில் இருந்து கடனுக்கு எண்ணெய் கப்பல் வந்ததும் பெருமெடுப்பில் வரவேற்பு விழா நடத்துகின்றனர். இதுதான் தற்போதைய உலகில் மிகப்பெரிய நகைச்சுவையாகும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இன்று இந்தியாவில் இருந்து கடனுக்கு எரிபொருள் வாங்கப்படுகின்றது. அதனை ஏற்றிவரும் கப்பலுக்கு வரவேற்பு விழாவும் நடத்தப்படுகின்றது. கடனுக்கு வாங்கும் எரிபொருளை ஏற்றிவரும் கப்பலுக்கு அமைச்சர்கள் சென்று வரவேற்பு விழா நடத்தும் சம்பவம் இதற்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்றதில்லை.

நல்லாட்சியின்போது இலங்கையில் வீடுகளை நிர்மாணிப்பதற்கு இந்தியா நன்கொடை வழங்கியது. இது கடன் அல்ல. இந்தியாவின் நன்கொடையில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை திறந்து வைப்பதற்கு பிரதமர் மோடிவரும்போது, கறுப்பு கொடி பறக்கவிடுமாறு இவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
நன்கொடை கிடைக்கும்போது கறுப்புகொடி பறக்கவிடுமாறு கூறினர். ஆனால் இன்று கடனுக்கு எண்ணெய் கப்பல்வரும்போது அதற்கு வரவேற்பு விழா நடத்துகின்றனர். அன்று தேசப்பற்று குறித்து கொக்கரித்தவர்கள், எமது நாட்டு மக்களின் கடன் சுமையை அதிகரிக்கும் திட்டத்துக்கு வரவேற்பு விழா நடத்துகின்றனர். எதிர்காலத்தில் நிச்சம் எரிபொருள் அதிகரிக்கப்படும். இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.” – என்றார்.