தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து போராட்டம்!

0 148

 அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும் வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பொகவந்தலாவை நகரில் முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமான இப்போராட்டத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதித் தலைவர்களுமான பழனி திகாம்பரம், வீ. இராதாகிருஷ்ணன்,நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

அத்துடன் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் போராட்டத்தில் பங்கேற்று விலையேற்றத்தைக் கண்டித்தனர்.

இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொகவந்தலாவை நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் இன்று மூடப்பட்டிருந்தன.

அத்தியாவசியப் பொருட்களின் விலையை உடனடியாகக் குறைக்கவும், வரவு – செலவுத் திட்டத்தில் நிவாரணம் வேண்டும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும், அவர்களின் தொழில் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் உரம் வழங்க வேண்டும், அதற்கான விசேட பொறிமுறை அவசியம் எனக் கோஷம் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.