தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அதிபர் முன் மதுபோதை கும்பல் மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்! – மடுவில் சம்பவம்

0 89

மடுவில் சுமார் 12 பேர் கொண்ட குழுவின் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் நான்கு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

நேற்றையதினம் (12) மாலை  மன்னார் – மடு பெரியபண்டிவிரிச்சான் கிழக்கு பகுதியில் மேலதிக வகுப்பிற்கு 4 மாணவர்கள் சென்று கொண்டிருந்த நிலையில் அப்பகுதியில் மது விருந்தில் கலந்துகொண்ட 12 பேர் கொண்ட  இளைஞர்கள் குழு  மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நேற்றையதினம் காலை மன்/பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலயத்தில் குறித்த மாணவர்களுக்கும் சக மாணவர்களுக்கும் இடையில் சிறு முரண்பாடு ஏற்பட்ட நிலையில் அப்பாடசாலையின் அதிபரால் சமரசம் செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில், பாடசாலை முடிவடைந்து குறித்த நான்கு மாணவர்களும் மேலதிக வகுப்பிற்கு சென்றுகொண்டிருந்த நிலையில் சக மாணவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் கடுமையாகத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

 இதனையடுத்து அப்பகுதி மக்கள் காயமடைந்த மாணவர்களை வீடுகளுக்குள் அழைத்து காப்பாற்றியுள்ளனர். 

இதனையடுத்து குறித்த வீட்டினை முற்றுகையிட்டு, மேலும் சிலர் வரவழைக்கப்பட்டு வீட்டுக்குள் நுழைந்தது மீண்டும் மாணவர்களைத் தாக்க முற்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாடசாலையில் நடந்த பிரச்சினையின் தொடர்ச்சியாக இப்பிரச்சினை இடம்பெறுவதால் குறித்த மாணவர்கள் மன்/பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலய அதிபரை தொலைபேசியில் அழைத்து சம்பவிடத்திற்கு வரவழைத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த அதிபர் அயல் வீட்டவர்களின் பாதுகாப்பிலிருந்த மாணவர்களை வெளியில் அழைத்து மது போதையில் தாக்க வந்த குழுவோடு சமரசம் செய்ய முயற்சித்த நிலையில் அந்த குழுவினர் மீண்டும் மாணவர்கள் மீது சரமாரியாகத் தாக்கியதையடுத்து பாதுகாப்பான பகுதியை நோக்கி உயிரை காப்பாற்ற ஓடித் தப்பித்துள்ளனர் அந்த அப்பாவி மாணவர்கள். 

தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் மடு பொலிஸ் நிலையத்தில் குறித்த மாணவர்களால் முறைப்பாடு கொடுக்கப்பட்டதையடுத்து, முருங்கன் வைத்தியசாலையில் தற்போது தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் இன்று (13) மதியம் வரை யாரும் கைது செய்யப்படவில்லையென்பதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் தாக்குதலுக்குள்ளான மாணவர்களில் ஒருவர் மன்/பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலத்தின் சிரேஷ்ட மாணவத் தலைவன்  என்பதுடன் மற்றும் இருவர் மாணவர் தலைவர்கள் என்பதுடன், குறித்த சம்பவத்தின் போது சுப நிகழ்வொன்றில் மது விருந்தில் இருந்து இரண்டு கட்டங்களாக தாக்க வந்த 15 பேர் கொண்ட குழுவில் ஒருவர் வேலிக்கம்பிக்குள் விழுந்து சிறு காயமடைந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.